பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குநர் ஆகிறார்

By செய்திப்பிரிவு

பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ். 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மஹால்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு 'சமுத்திரம்', 'கடல் பூக்கள்', 'வருஷமெல்லாம் வசந்தம்', 'ஈரநிலம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

பின்பு நடிப்பிலிருந்து விலகி இயக்குநர் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். நடிகராக சில படங்களில் நடித்தாலும், இயக்குநராவதற்கு கதைகளும் எழுதி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருடைய இயக்கத்தில் 'சிகப்பு ரோஜாக்கள் 2' உருவாகவுள்ளதாகக் கூறப்பட்டது.

பாரதிராஜா இயக்கிய 'சிகப்பு ரோஜாக்கள்' கதையை ரீபூட் முறையில் உருவாக்கத் திட்டமிட்டார் மனோஜ். பின்பு அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். அதனைத் தொடர்ந்து 'கொம்பு' என்ற முழுநீளக் காமெடிப் படத்தை இயக்க முடிவு செய்தார். அதுவும் கைவிடப்பட்டது.

நீண்ட முயற்சிக்குப் பின், தற்போது மனோஜ் இயக்குநராக அறிமுகமாவது உறுதியாகியுள்ளது. ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ள புதிய படத்தை மனோஜ் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இது எந்தக் கதை, யார் நடிக்கவுள்ளார்கள் என்பதைப் படக்குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE