எழுத்தாளரிடம் மன்னிப்பு கோரிய ‘மிர்ஸாபுர்' தயாரிப்பாளர்கள் 

By ஐஏஎன்எஸ்

பிரபல இந்தி எழுத்தாளர் சுரேந்தர் மோகன் பதாக்கிடம் மிர்ஸாபுர் சீசன் 2 தயாரிப்பாளர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

2018ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘மிர்ஸாபூர்’. இதில் பங்கஜ் திரிபாதி, ஸ்வேதா திரிபாதி, அலி ஃபாஸல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தற்போது இந்த தொடரின் இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது.

இத்தொடரில் ஒரு காட்சியில் தான் எழுதிய புத்தகம் குறித்து தவறான முறையில் சித்தரிக்கப்பட்டிருப்பதாக எழுத்தாளர் சுரேந்தர் மோகன் பதாக் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.

அதில் தொடரில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம் தான் எழுதிய ‘தாபா’ என்ற புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு ஆபாசமான வாசகங்களை படிப்பது போல சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் அதில் குறிப்பிட்டிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரோ அந்த ஆபாசமான வாசகங்களோ தன்னுடைய புத்தகத்தில் இல்லையென்றும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் 50 ஆண்டுகளாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் தனது நற்பெயரை கெடுக்கும் வகையில் இக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதாகவும் சுரேந்தர் மோகன் கூறியிருந்தார்.

இந்நிலையில் ‘மிர்ஸாபுர்’ தயாரிப்பாளர்கள் எழுத்தாளர் சுரேந்தர் மோகனிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். இது குறித்து எக்ஸல் எண்டெர்டெய்மெண்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மிர்ஸாபுர் சீசன் 2-ல் சத்யானந்த திரிபாதி என்ற கதாபாத்திரம் தனது கையில் உங்கள் ‘தாபா’ வைத்துக் கொண்டு அதற்கு தொடர்பில்லாத வாசகங்களை படிப்பது போன்ற காட்சி உங்களையும் உங்கள் ரசிகர்களை காயப்படுத்தியதாக அறிகிறோம்.

இதற்காக உங்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறோம். மேலும் இந்த காட்சி எந்தவித உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இன்னும் 3 வாரங்களில் அந்த காட்டியில் உங்கள் புத்தகத்தை ‘பளர்’ செய்கிறோம் என்று உறுதிகூறுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE