கமல்ஹாசனுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் மோசமாக அழுதேன்: நவாசுதீன் சித்திக்

By செய்திப்பிரிவு

'ஹே ராம்' படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் மிக மோசமாக அழுததாக நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பல வருடங்களாக சின்ன சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து 'கேங்ஸ் ஆஃப் வசேபூர்' திரைப்படங்களின் மூலம் சர்வதேசப் புகழ்பெற்றவர் நடிகர் நவாசுதீன் சித்திக். சமகால பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படும் நவாசுதீன், தமிழில் ‘பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

சமீபத்தில் நவாசுதீன் அளித்த பேட்டி ஒன்றில், கமல்ஹாசனுடன் நடித்தது பற்றிப் பகிர்ந்துள்ளார்.

"பல முறை நான் சின்ன சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து பின் அது திரைக்கு வராமல் போனது நடந்திருக்கிறது. ‘ஹே ராம்’ திரைப்படத்தின்போது நான் கமல்ஹாசனின் இந்தி வசனப் பயிற்சியாளராக இருந்தேன். படத்தின் இயக்குநரும் அவரே என்பதால் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்தார்.

திலீப் குமார், நசீருதின் ஷா, அந்தோனி ஹாப்கின்ஸ், டென்ஸல் வாஷிங்டன் போன்ற நடிகர்களின் வரிசையில் கமல்ஹாசனையும் ஆராதிப்பவன் நான். இவர்களின் அத்தனை படங்களையும் பல முறை பார்த்திருக்கிறேன். எனவே, கமல்ஹாசன் என்னை நடிக்க வைத்ததில் குழந்தையைப் போல குதூகலித்தேன்.

மேலும், அவர் சொன்னது போல அது சிறிய கதாபாத்திரமாகவும் இல்லை. நினைத்ததை விட அதிக நேரம் வரும் கதாபாத்திரமாகவே இருந்தது. ஒரு கூட்டம் தாக்க வரும்போது அவர் என்னைக் காப்பாற்றுவார். அவருடன் இணைந்து நடிப்பதில் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன்.

ஆனால், படத்தின் இறுதி வடிவத்தில் (நீளம் கருதி) எனது காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. இதை அறிந்து நான் மிக மோசமாக அழுதேன். நடிகை ஸ்ருதி ஹாசன் எனக்கு ஆறுதல் சொன்னது நினைவில் உள்ளது. ஆனால் இதனால் எனக்குக் கோபமில்லை. கமல் போன்ற ஒரு முழுமையான கலைஞன் மீது எப்படிக் கோபம் வரும். அவர் பெயரைச் சொல்லக் கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது" என்று நவாசுதீன் கூறியுள்ளார்.

இதன்பின் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தின் இந்தித் தயாரிப்பின்போதும் கமல்ஹாசனின் இந்தி வசனப் பயிற்சியாளராக நவாசுதீன் பணியாற்றியுள்ளார்.

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிக ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக இந்தப் பேட்டியில் நவாசுதீன் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE