சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம் எனக்குள் ஓடுகிறது: பாயல் கோஷ் 

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம் என் உடலிலும் ஓடுகிறது என்று நடிகை பாயல் கோஷ் கூறியுள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக திரைத்துறையினரும் அவரது முன்னாள் மனைவிகளும் குரல் கொடுத்தாலும், பாயல் கோஷ் தனது நிலையில் தீர்மானமாக இருந்து வந்தார்.

இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்புக் கோரி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைப் பாயல் சந்தித்துப் பேசினார்.

சுஷாந்த் மரணம், பாலிவுட் போதைப் பொருள் விவகாரங்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம் என் உடலிலும் ஓடுகிறது என்று பாயல் கோஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

''என் அப்பாவுடைய கொள்ளுத் தாத்தா புரட்சிகரமான ஒரு பத்திரிகையாளர். அவருக்குக் கொல்கத்தாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது. எனது மாமா ஒருவர் கொல்கத்தாவின் மேயராக இருந்துள்ளார். எனக்கும் சமூகத்துக்குச் சேவை புரிவது மிகவும் பிடித்தமான ஒன்று.

தங்கள் கடைசி மூச்சு வரை நாட்டுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களான பினாய் போஸ் மற்றும் பாதல் குப்தா இருவரும் என் உறவினர்கள். அவர்களுடைய ரத்தம் என் உடலிலும் ஓடுகிறது. எனவே ,யாருடைய நற்பெயரையும் நான் கெடுக்க மாட்டேன். ஆனால், எனக்குத் தீங்கிழைப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்''.

இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE