தனக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. இதற்குப் பெரும் எதிர்ப்பு உருவானது. பலரும் முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். இயக்குநர் சீனு ராமசாமியும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். பெரும் எதிர்ப்பைத் தொடர்ந்து, '800' படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 28) காலை சீனு ராமசாமி, "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதனால் பரபரப்பு உண்டானது.
உடனடியாகப் பத்திரிகையாளர்கள் சீனு ராமசாமி வீட்டுக்கு விரைந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் சீனு ராமசாமி பேசியதாவது:
» பேட்வுமன் புதிய லுக் வெளியீடு
» பரிசுப் பணத்தில் மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி?- கேபிசி போட்டியாளரைக் கண்டித்த அமிதாப் பச்சன்
"எனக்கு அரசியல் சினிமா தெரிந்த அளவுக்கு, சினிமா அரசியல் தெரியவில்லை. இதுதான் உண்மை. சமீபத்தில் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் வந்த சூழலில் நான் ரொம்ப வேதனைப்பட்டேன். அப்போது விஜய் சேதுபதியிடம் தனிப்பட்ட முறையில் என் கருத்தை எடுத்துச் சொன்னேன். பொதுவெளியிலும் எடுத்துச் சொன்னேன். ஒருபகுதி தமிழர்களுடைய எதிர்ப்பைச் சம்பாதிக்கக் கூடாது மற்றும் விஜய் சேதுபதி நலன் கருதியும் எனது ட்விட்டரில் பதிவிட்டேன். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு எதிராக இருக்கிறேன் என்று தொடர்ந்து செய்திகள் சித்தரிக்கப்பட்டன.
'நன்றி வணக்கம்' என்று விஜய் சேதுபதி பதிவிட்டவுடன், அவருக்குத் தொலைபேசியில் போன்செய்து 'இது என்ன பொருள் தருகிறது' என்று கேட்டேன். "சார், அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்ததால் நடிக்கச் சம்மதித்தேன். நல்ல கதாபாத்திரம், உலகம் முழுக்க ரீச் ஆவோம் என்றுதான் ஒப்புக் கொண்டேன். அதற்குப் பிறகுதான் தமிழர்களைப் புண்படுத்துவது மாதிரி இருக்கிறது எனத் தெரிந்துகொண்டேன். இந்தச் சூழலில் என்ன செய்யலாம் என நினைக்கும்போது, தயாரிப்பு நிறுவனமே புரிந்துகொண்டு விலகிப் போனார்கள். ஆகையால், அவர்களுக்கு நன்றி வணக்கம் என்று சொன்னேன்" என்றார் விஜய் சேதுபதி.
அதோடு அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. அதற்குப் பிறகும் கூட நேரடியாக சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயதசமி அன்று விஜய் சேதுபதியின் அலுவலகப் பூஜைக்குக் கூட போய்விட்டு வந்தேன். ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் விஜய் சேதுபதி மீது வைத்திருக்கும் அன்பை இங்குதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால், நான் ஏதோ விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக நள்ளிரவில் வாட்ஸ்-அப்பில் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக மெசேஜ்கள் அனுப்புகிறார்கள். எதற்கு இதைச் செய்கிறார்கள் எனத் தெரியவே இல்லை. நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்தச் சமயத்தில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆகையால், மனப் பதற்றத்தில் உள்ளேன். இதை உடனே தெரியப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டேன்"
இவ்வாறு சீனு ராமசாமி பேசினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளும், சீனு ராமசாமியின் பதில்களும்!
கேள்வி: யார் என்னவென்று அச்சுறுத்துகிறார்கள்?
பதில்: ஆபாச வார்த்தைகளில் பேசுகிறார்கள். அதெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. நானும் நன்றி வணக்கம் என ட்வீட் போட்டவுடன், அதற்குக் கீழே கடும் எதிர்வினைகள் இருந்தன. உடனே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன். உண்மையில் விஜய் சேதுபதி மீது உலகத் தமிழர்கள், தமிழ்ப் படைப்பாளிகள் என அனைவருமே கோரிக்கை வைத்தார்கள். யாருமே விஜய் சேதுபதியைத் திட்டவே இல்லை. அதே போல் நானும் கோரிக்கைதான் வைத்தேன். இது தவறா? எனக்கும் விஜய் சேதுபதிக்கும் எதிர்ப்புணர்ச்சியை உண்டாக்கி, அதில் சிலர் குளிர் காய வேண்டும் என நினைக்கிறார்கள்.
கேள்வி: யார் நினைக்கிறார்கள்?
பதில்: அது எனக்குத் தெரியவில்லை. காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப் போகிறேன்.
கேள்வி: எத்தனை நாட்களாக இது தொடர்கிறது?
பதில்: 4 - 5 நாட்களாக நடக்கிறது.
கேள்வி: பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பதில்: காவல்துறையில் என்ன பேசினார்கள் என்பதை எழுதியே கொடுக்கப் போகிறேன். முகம் தெரியாத சில சக்திகள் என்ன நோக்கத்திற்காக எச்சரிக்கை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படித் தெரிந்தால் கூட அவர்களிடம் பேச நான் தயாராக இல்லை. எந்தவொரு அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. தமிழ் ஈழ ஆதரவாளர்கள் எனக்கு நன்றிதான் சொல்கிறார்கள். விஜய் சேதுபதிக்கும் உங்களுக்குமான இணக்கம் அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் தைரியமாக உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டீர்கள். நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்கள்.
கேள்வி: மிரட்டல் விடுப்பது விஜய் சேதுபதி ரசிகர்கள் என நினைக்கிறீர்களா?
பதில்: விஜய் சேதுபதி ரசிகர்கள் என்னைக் கண்டிப்பாக மிரட்ட மாட்டார்கள். அவர்கள் என்னுடைய தம்பிகள். யாரென்று தெரியவில்லை. எதற்காகப் பண்ணுகிறார்கள் என்றும் தெரியவில்லை. பின்னணி என்னவென்று தெரியவில்லை.
கேள்வி: இது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேசினீர்களா? அவர் என்ன சொன்னார்?
பதில்: நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். விட்டுவிடுங்கள் என்றார். நம் இருவருக்குள் யார் வந்து முரண்பாட்டை உண்டாக்க முடியும் என்று சொன்னார். ஆனால், காய்கறிகள் வாங்க, டீ குடிக்க வெளியே செல்வேன். இப்போது தனியாக வெளியே செல்ல அச்சமாக உள்ளது. ஆகையால், இதை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன். எனக்கு இந்த மாதிரி தொந்தரவுகள் வராமல் முதல்வர் ஐயா பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: முதல்வர் ஆதரவு தரவேண்டும் என்கிறீர்கள். சந்திக்கவுள்ளீர்களா?
பதில்: முதல்வர் அனுமதி கொடுத்தால் நிச்சயமாக நேரில் சந்திப்பேன். இதுவரை அனுமதி கேட்கவில்லை. எப்படித் தொடர்புகொள்வது எனத் தெரியவில்லை.
கேள்வி: யாருடைய பின்புலம்? விஜய் சேதுபதி ரசிகர்கள் இல்லை என்கிறீர்கள்? பேசும்போது தெரிந்திருக்க வேண்டுமே?
பதில்: என்னை ஆபாசமாகத் திட்டுகிறார்கள். நான் 7 படங்கள் இயக்கியுள்ளேன். 48 வயதாகிறது. இதை ஏன் நீ செய்தாய் எனத் திட்டுகிறார்கள். விஜய் சேதுபதியை ஏன் நடிக்கக் கூடாது எனச் சொன்னாய், உன்னைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா. நீ வாய்ப்புக்காக தானே இதெல்லாம் செய்கிறாய், என்கிறார்கள்.
இவ்வாறு சீனு ராமசாமி பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago