நடிகை சார்மியின் பெற்றோருக்குக் கரோனா தொற்று: ட்விட்டரில் கவலைப் பகிர்வு

நடிகை சார்மியின் பெற்றோருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சார்மி ட்விட்டரில் கவலையுடன் பகிர்ந்துள்ளார்.

"என் பெற்றோர், ஹைதராபாத்தில் அவர்கள் இல்லத்தில், மார்ச் மாதத்திலிருந்து தனிமையில்தான் இருந்து வருகிறார்கள். அதிகபட்சமான அக்கறை எடுத்துத் தங்களைப் பார்த்து வந்தனர். ஆனால், ஹைதராபாத் வெள்ளமும், அதனால் ஏற்பட்ட மாசும்தான் அவர்கள் தொற்றுக்குக் காரணம் என்று தெரிகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

எனது அப்பாவுக்கு ஏற்கெனவே இருக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகளை வைத்துப் பார்க்கும்போது இந்தச் செய்தி என்னை மொத்தமாக உடையச் செய்தது. அம்மாவும் அப்பாவும் உடனடியாக ஹைதராபாத்தில் இருக்கும் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் டாக்டர் நாகேஸ்வர் ரெட்டியை எனக்குப் பல வருடங்களாகத் தெரியும். அவரை நான் கண்மூடித்தனமாக நம்புகிறேன்.

அவரது அற்புதமான மருத்துவர் குழு என் பெற்றோரை அற்புதமாகப் பார்த்துக் கொள்கிறது. பெற்றோரும் சிகிச்சையில் நன்றாகத் தேறி வருகின்றனர். மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றி.

இந்த அனுபவத்துக்குப் பின் எனது அறிவுரை இதுதான். உங்களுக்கு அறிகுறிகள் ஏதாவது இருந்தால் தாமதப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சீக்கிரம் தொற்றைக் கண்டறிவது நிறையப் பாதிப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றும். உங்கள் ஆரோக்கியத்துக்கு ஆசிர்வாதமாக இருக்கும். எனது பெற்றோர் மீண்டும் நலமாக, மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்கக் காத்திருக்கிறேன்.

துர்கா அம்மா உங்களைத் தீமையிலிருந்து காத்து உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும். என் பெற்றோரின் நல் ஆரோக்கியத்துக்கு, இந்தப் போராட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் உங்களின் நல் எண்ணங்களை அனுப்பிக் கொண்டே இருங்கள்" என்று சார்மி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE