ஜேம்ஸ் பாண்ட் 'நோ டைம் டு டை' ஓடிடி விற்பனைக்கு அல்ல

By ஐஏஎன்எஸ்

'நோ டைம் டு டை' திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளங்களில் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் தெர்வித்துள்ளது.

டேனியல் க்ரெய்க் கடைசியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'நோ டைம் டு டை' படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதற்காக 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இதற்கான விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன. தற்போது இந்தச் செய்திகள் அனைத்தையும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம் மறுத்துள்ளது.

முன்னதாக, நவம்பர் மாதம் வெளியாகவிருந்த இந்தத் திரைப்படத்தை தயாரிப்பு தரப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைத்தது. இன்னும் சர்வதேச அளவில் கரோனா நெருக்கடி நிலவி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இப்படித் தள்ளிவைத்திருப்பதால் எம்ஜிஎம் நிறுவனத்துக்கு 30லிருந்து 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, ஆப்பிள், அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், படத்தை வாங்கி தங்கள் தளங்களில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில ஹாலிவுட் செய்தி இணையதளங்கள் கூறியிருந்தன.

"நாங்கள் வதந்திகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. படம் ஓடிடி விற்பனைக்கு இல்லை. திரைப்பட ரசிகர்களுக்கான திரையரங்க அனுபவத்தைப் பாதுகாக்க, திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குத் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று எம்ஜிஎம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

எம்ஜிஎம் மறுத்த பின்னரும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், எம்ஜிஎம் கேட்ட அதிக தொகைக்கு வாங்க எந்தத் தளமும் தயாராக இல்லை என்றும் மற்ற போட்டி தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருகின்றன.

250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் தயாராகியுள்ள 'நோ டைம் டு டை', டேனியல் க்ரெய்க் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம். ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இது 25-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE