ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்: குழந்தையைத் தத்தெடுத்த மந்திரா பேடி நெகிழ்ச்சி

சமீபத்தில் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்துள்ள பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

1994ல் தூர்தர்ஷன் தொடரான சாந்தியில் அறிமுகமாகி, பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தவர் மந்திரா பேடி, உலகக்கோப்பை கிரிக்கெட், சாம்பியன்ஸ் கோப்பை, ஐபிஎல் கிரிக்கெட் என தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார். தமிழில் சிம்புவின் மன்மதன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். பிரபாஸ் ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்த சாஹோ (2017)வில் வில்லியாகவும் தோன்றினார்.

மும்பை புறநகர்ப் பகுதியில் வசித்து வரும் மந்திரா பேடி மற்றும் அவரது கணவர் இயக்குநர் ராஜ் கவுசல் ஆகியோர் தற்போது நான்கு வயது சிறுமியைத் தத்தெடுத்துள்ளனர். அக்குழந்தைக்கு தாரா பேடி கவுசல் என்று பெயரிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் தனது குடும்பத்தினருடன் 9 வயது மகன் விர் உடன் இருக்கும் படத்தை வெளியிட்டு இதுகுறித்த தகவலை மந்திரா பேடி பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மந்திரா பேடி கூறியுள்ளதாவது:

“அவள் எங்களிடம் வந்திருக்கிறாள். மேலே இருந்து ஒரு ஆசீர்வாதம் போல. எங்கள் சிறுமி, தாரா. நான்கு ஆண்டுகளும் கொஞ்சமும் அவள் வயது. அவளது கண்கள் நட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கின்றன.

விர்ருக்கு அவள் சகோதரி. திறந்த கைகள் மற்றும் தூய அன்புடன் வீடு அவளை வரவேற்கிறது. மிக்க நன்றியுடன் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி எங்கள் மகள் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டாள்''

இவ்வாறு மந்திரா பேடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE