பொங்கல் வெளியீட்டில் தெலுங்கு படங்களுக்கு இடையே போட்டி

தெலுங்கில் பல படங்கள் போட்டிப் போட்டு பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன.

இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களாக புதிய படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைய தொடங்கியுள்ளதால், மத்திய அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதில் திரையரங்குகள் திறப்புக்கு சமீபத்தில் தான் அனுமதியளித்தது.

இதனிடையே, திரையரங்குகள் திறப்பு தாமதத்தால் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏனென்றால், திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ஒரு சீட் ஒரு சீட் தான் டிக்கெட் புக்கிங் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால் 500 சீட்கள் உள்ள திரையரங்குகளில் 250 பேர் தான் படம் பார்க்க அனுமதிக்கும் நிலை. இப்படியான சூழலில் லாபம் கிடைக்குமா என்று தயாரிப்பாளர்கள் பலரும் தயங்கி, ஓடிடி வெளியீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.

தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியுள்ளதால், பல படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளன. ஏனென்றால், தீபாவளிக்குள் முழுமையாக கரோனா அச்சுறுத்தல் குறையாது என்பது தான் காரணம். இதில் தெலுங்கு திரையுலகில் பல படங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன.

இன்று (அக்டோபர் 25) சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அனைத்திலும் 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரவிதேஜா நடித்து வரும் 'க்ராக்', கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'மோஸ்ட் எலிஜபிள் பேச்சிலர்', ராம் நடித்துள்ள 'ரெட்' மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள 'காடன்' ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளன. இன்னும் சில படங்கள் இணைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE