மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய விஜய்; பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி, பாராட்டியுள்ளார் விஜய்.

சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளிக்கும்போது, “விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் கூப்பிடும்போது நாங்கள் வருவோம். நாங்களாக வந்து மக்களைக் கூப்பிடுவதை விட, மக்கள் 'வா' என்று கூப்பிடும்போது இன்னும் பவர்ஃபுல்லாக இருக்கும்” என்று பேட்டியளித்தார்.

இந்தப் பேட்டியால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் கட்சி தொடங்கவுள்ளாரா என்ற பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை முதலே விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சிலர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின. உடனடியாக அரசியல் குறித்துதான் ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்று தகவல் பரவவே, மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்தபோது, “அரசியலில் தன்னைத் தொடர்புப்படுத்தி பல்வேறு ஊர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் விஜய். இனிமேல் அப்படியான போஸ்டர்கள் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் இயக்கத்தில் உள்ள சில நிர்வாகிகள் தாங்களாகவே கரோனா ஊரடங்கு சமயத்தில் உதவிகள் செய்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். அவ்வாறு செய்த நிர்வாகிகளைத்தான் அழைத்துப் பேசி, பாராட்டினார்.

மேலும், இது தொடர்பாக மக்கள் பணிகளை, உதவிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள், தாராளமாக என்னிடமிருந்து உதவிகள் வரும் என்று உறுதியளித்தார்" என்று கூறினார்கள்.

மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்து எதுவும் விஜய் பேசவில்லை என்றும், முழுக்க கரோனா ஊரடங்கு சமயத்தில் பல்வேறு உதவிகளைச் செய்தவர்களைப் பாராட்டவே விஜய் சந்தித்தார் என்றும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE