லவீனா லோத் கூறிய போதை மருந்து குற்றச்சாட்டு: அமைரா தஸ்தர் மறுப்பு

By ஐஏஎன்எஸ்

நடிகை லவீனா லோத் கூறிய போதை மருந்து குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகை அமைரா தஸ்தர், அவருக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறார்.

இயக்குநர் மகேஷ் பட்டின் உறவினர் சுமித் சபர்வாலின் முன்னாள் மனைவி லவீனா லோத். இவர் ஒரு சில கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சுமித்திடமிருந்து விவாகரத்து பெற்ற காரணம் குறித்து லவீனா லோத் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதில் சுமித் போதை மருந்து விற்று வருவதும், பெண்களை வைத்துப் பாலியல் தொழில் நடத்துவதும் தனக்குத் தெரிய வந்ததால், தான் விவாகரத்து செய்ததாகவும், இதெல்லாம் தெரிந்திருந்த மகேஷ் பட் தன்னையும் தன் குடும்பத்தையும் துன்புறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அமைரா தஸ்தர் மற்றும் சப்னா பப்பி உள்ளிட்ட நடிகைகளுக்கு சுமித் போதை மருந்து விநியோகம் செய்ததாக லவீனா குறிப்பிட்டிருந்தார். இதனால் அமைரா தரப்பிலிருந்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் லவீனா சொன்ன விஷயங்கள் பொய்யென்றும், அது அமைராவுக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டதாகவும் அமைராவின் வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

"எங்கள் கட்சிக்காரர் தன்னைப் பற்றி அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை முழுமையாக மறுக்கிறார். அது பொய்யானது, ஆதாரமற்றது. இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற விஷயங்களை ஒருவர் பேசுவது துரதிர்ஷ்டமானது. எங்கள் கட்சிக்காரர் அதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்" என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமைரா தமிழில் 'அனேகன்' திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். சில தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

முன்னதாக, லவீனா வெளியிட்ட காணொலியில், மகேஷ் பட் பாலிவுட்டில் மிகப்பெரிய டான் என்றும், அவர் சொல்லைக் கேட்காதவர்களின் வாழ்க்கையை அவர் நாசமாக்கிவிடுவார் என்றும் லவீனா குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் என்ன நடந்தாலும் அதற்கு மகேஷ் பட் உள்ளிட்டவர்கள் தான் காரணம் என்றும் கூறியுஇருந்தார்.

லவீனா பேசிய விஷயங்களை மகேஷ் பட்டின் வழக்கறிஞர் மறுத்து, லவீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE