அமிதாப் வருகையை எதிர்நோக்கும் மூதாதையர் கிராமம்

By ஐஏஎன்எஸ்

பாபு பட்டியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் இருக்கும் சிறிய கிராமமான இது, தற்போது உற்சாகத்தில் திளைத்திருக்கிறது. உள்ளூர் மக்கள், ஊரைத் தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் தங்களது வீடுகளைக் கூட வெள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லாவற்றுக்கும் காரணம் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன்தான். ஏனென்றால் அவரது மூதாதையர் வாழ்ந்த கிராமம்தான் இது. சமீபத்தில் கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு போட்டியாளர், ஒரு கேள்விக்குப் பதில் கேட்க தனது உறவினர் ஒருவரை வீடியோ காலில் அழைத்துப் பேசினார். அவர் உத்தரப் பிரதேசத்தில் இருப்பவர். அவர் தான் அமிதாப்பை பாபு பட்டிக்கு வாருங்கள் என்று அழைத்தவர். அப்போது, சமீபத்தில் தனது குடும்பத்துடன் அந்தக் கிராமத்துக்குச் செல்வதைப் பற்றிப் பேசியதாகவும், அங்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் இருப்பதாகவும் அமிதாப் கூறினார். இதைத் தொடர்ந்தே பாபு பட்டியில் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அமிதாப் பச்சனின் தந்தை, பிரபல எழுத்தாளர் ஹரிவன்ஷ் ராய் பச்சன். இவரது பெற்றோர் ப்ரதாப் நாராயண் ஸ்ரீவஸ்தவா மற்றும் சரஸ்வதி தேவி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பாபு பட்டியில், அவர்களது பரம்பரை வீட்டில் வாழ்ந்தவர்கள். ஹரிவன்ஷின் பெயரில் இந்தக் கிராமத்தில் ஒரு நூலகம் உள்ளது. இதை 2006 ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி சார்பில் எம்.பி.யாக இருந்த, அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சனும், இன்னொரு அரசியல் தலைவர் அமர் சிங்கும் சேர்ந்து திறந்து வைத்தனர்.

அந்தச் சமயத்திலேயே, ஜெயா பச்சனை தங்கள் கிராமத்துக்கு வரவழைத்த அமர் சிங்குக்கு நன்றி சொல்லி, ஊர் மக்கள் சுவரில் பெரிய நன்றிச் செய்தியை ஒட்டினர்.

இந்த நூலகத்துக்குப் பக்கத்தில் இருக்கும் வேப்பமரத்தைத் தனது எழுத்துகளில் ஹரிவன்ஷ் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மரத்தில் இருக்கும் சிறிய கோயிலை அமிதாப் பச்சனின் குடும்பத்தினர்தான் கட்டியிருக்கின்றனர்.

"சூப்பர் ஸ்டாரைச் சந்திக்க வேண்டும் என்ற எங்கள் கனவு இப்போது நிறைவடையும். அவரது வருகை குறித்த அறிவிப்புக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறொம்" என்கிறார் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பக்வான் தாஸ் யாதவ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE