குருதிப்புனல் 25; ‘பயம்னா என்னன்னு தெரியுமா”, ‘பிரேக்கிங் பாயிண்ட்’! கமல், அர்ஜுன், நாசர், பி.சி.ஸ்ரீராமின் மிரட்டியெடுத்த ‘குருதிப்புனல்’!  

By வி. ராம்ஜி

’அந்த இங்கிலீஷ் படம் பாத்தியா. மிரட்டிருக்காங்கப்பா’ என்று ஆங்கிலப் படத்தைப் பார்த்துவிட்டு மிரண்டு சொன்னவர்கள்தான் நாம். சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். ‘இந்த மாதிரிலாம் நம்மூர்ல படமே எடுக்க முடியாதுப்பா’ என்று ஆங்கிலப் படத்தைப் பார்த்துவிட்டுப் பெருமைப்பட்டுக்கொள்வோம். 64ம் ஆண்டு வந்த ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில், நாகேஷிடம், ‘நாங்க இங்கிலீஷ் படம் மட்டும்தான் பாப்போம்’ என்று காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் சொல்லுவார்கள். ஆனால், ஆங்கிலப்படத்துக்கு இணையான மேக்கிங்கில் அப்போதே வந்தது அந்தப் படம். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் மிரட்டியெடுக்கிற அந்தப் படம்... ‘குருதிப்புனல்’.

கமலின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அதிலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படங்கள் தனி தினுசு. அவரின் ஹாசன் பிரதர்ஸ் காலத்துப் படங்களில் இருந்தே அப்படித்தான். ’அபூர்வசகோதரர்கள்’... டெக்னிக்கலைப் புகுத்தி குள்ளகமலை வைத்து உயரம் தொட்டார் கமல். ’சத்யா’வில், பொய்யான நிகழ்கால அரசியலை உண்மையாகப் பேசினார். ’தேவர்மகன்’, இன்று வரை தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ’மகளிர் மட்டும்’, மீ டூ வை அன்றைக்கே பேசியது. உலக சினிமாவின் தரத்துக்கு இணையாக, படம் சொல்லப்பட்ட விதத்திலும் நுட்பத்திலும் அதகள ஆட்டம் போட்டு அசத்திய படம்… குருதிப்புனல்.
சட்டத்தைக் காக்கிறவர்களுக்கும் தீயசக்திகளாகத் திகழ்பவர்களுக்கும் இடையே நடக்கிற யுத்தம்தான் ’குருதிப்புனல்’ என்று ஒற்றைவரியில் சொல்லிவிடமுடியாது. அத்தனை விஷயங்களையும் நுணுக்கி நுணுக்கிச் செதுக்கியிருக்கிற வீரியம்தான் ’குருதிப்புனல்’.

’துரோக்கால்’. மராட்டியப் படம். இந்தப் படத்தைத்தான் உரிமையைப் பெற்று, உலக சினிமாவாக்கினார் கமல். அந்த மொழுமொழு மீசையில்லா முகமும் ஒட்டவெட்டிய தலைமுடியும் அரைக்கைச் சட்டையும் கொண்டு இன்னொரு அவதாரத்தை நிகழ்த்தினார் கமல். விஸ்வரூபம் காட்டினார்.

குருதிப்புனல் வெளியான போது எல்லா கமல் படங்களுக்கும் போலவே இதற்கும் நிகழ்ந்தது அப்படியொரு விமர்சனம். அவரின் ’விக்ரம்’, ’குணா’, ’மைக்கேல் மதன காமராஜன்’, ‘அன்பே சிவம்’ முதலான எண்ணற்ற படங்களை முதல் நாள் பார்த்த ரசிகர்கள் போலவே இதையும் பார்த்துவிட்டு, ‘ரொம்ப ஹைலியா பண்ணிருக்காரு’, ‘ஒண்ணுமே புரியலப்பா’ என்றெல்லாம் சொன்னார்கள். பிறகு கமலின் எல்லாப் படங்களையும் போலவே சில வருடங்களில், குருதிப்புனலையும் கொண்டாடத் தொடங்கினார்கள். அந்தக் கொண்டாட்டமும் மரியாதையும் இன்று வரை தொடர்கிறது.

குருதிப்புனலை எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் வைத்த கண் வாங்காமல் பார்த்து மிரண்டு போவார்கள் ரசிகர்கள்.

குருதிப்புனல் ஆதியையும் அப்பாஸையும் மறக்கவே முடியாது. ஆதியாக கமல். அப்பாஸாக அர்ஜூன். இருவரும் நண்பர்கள். போலீஸ் அதிகாரிகள். பத்ரி என்பவனின் தலைமையில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புக்குள் காவல்துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டுபேரை அனுப்பிவைக்கிறார்கள்.

அவர்கள் அங்கிருந்தபடி ரகசியம் சொல்கிறார்கள். அதன்படி, ரயில்வே ஸ்டேஷனில், தீவிரவாத அமைப்பின் சிலரை கைது செய்கிறார்கள். டிரைவர் நாசர் உட்பட கைதாக்கி விசாரிக்கிறார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தின் தலைவன் நாசர்தான் என்பதை பிறகு அறியும்போது, நமக்கு அடிவயிறு கலங்கித்தான் போகிறது.

படத்தில், கொஞ்ச நேரம் கமலிடம் பந்து இருக்கும். அது கொஞ்ச நேரத்தில் அர்ஜூன் கையில் தடக்கென்று வரும். அப்பாஸ் என்கிற அர்ஜூன் அப்ளாஸ் அள்ளுவார். அதன் பிறகு பத்ரி என்கிற நாசரிடம் பந்து பிடிபடும். அகப்படும். அவ்வளவுதான். கமலையும் அர்ஜூனையும் மட்டுமல்ல, நம்மையும் மிரட்டியெடுத்து திகில் பரப்பிக்கொண்டிருப்பார் நாசர்.

கமலின் மகன் சீனு என்கிற சீனிவாசன் சுடப்படுகிறான். அதுவொரு ஆரம்பம். பிறகு நாசரைக் கொல்ல முனைவார் கமல். ‘வீரம்னா என்னன்னு தெரியுமா. பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது’ என்ற கமலின் வசனத்துக்கு கைத்தட்டல் தியேட்டரை அதிரவைத்தது. ‘எல்லாருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு’ என்று கமல் பேசும் இடமும் வார்த்தையும் அந்த அறைக்கதவின் சிறிய வழியினூடே தெரிகிற கமலின் முகமும் ரகளை பண்ணும்.

நாசரின் பேயாட்டத்தில் அர்ஜுன் இரையாவார். கொஞ்சம்கொஞ்சமாக கமலின் பிடி நழுவிக்கொண்டே இருக்க, அப்படியே பயமும் கவ்விக்கொண்டிருக்க, அந்த கையாலாகாத நிலையை, அச்சுஅசலாகக் கொண்டு வந்து, நமக்குள்ளும் ஒரு பயத்தை, பீதியை, அடிநெஞ்சில் கலவரத்தை ஏற்படுத்திவிடுவார் கமல். வில்லன் என்றால் படம் பார்க்கிற நம்மையும் மிரட்ட வேண்டும். அப்படியொரு வில்லனாக நாசரைத் தவிர வேறு யாரும் பண்ணியிருக்கவே முடியாது.

ஒருகட்டத்தில், தங்களின் உயரதிகாரி கே.விஸ்வநாத்தான் தீவிரவாதிகளுக்கு ஆல் இன் ஆல் உதவிகளைச் செய்பவர் என்பது தெரியவர, நொறுங்கிப்போகிறார் கமல். தன் மகனுக்கு அவர் பெயரைச் சூட்டி மரியாதை செய்திருக்கும் நிலையில், அவரை மேல்மட்டத்தில் மாட்டிவிடும் சூழல். அந்தத் தருணத்தில், கே.விஸ்வநாத் எடுக்கும் முடிவு, இன்னும் நொறுங்கச் செய்யும் கமலை!

இதனிடையே ராக்கெட் லாஞ்சரை செய்து வெடிக்கச் செய்யும் அஜய்ரத்தினத்தைப் பிடிப்பது தனி எபிசோடு. ஒருகட்டத்தில், நாசரை விடுவிக்கவேண்டிய நிலை. யாருக்கும் சொல்லாமல், கமலுக்கே கூட சொல்லாமல், அர்ஜூன் தீவிரவாதிகளின் இடத்துக்குச் செல்ல, அங்கே அவர் சிக்கிக்கொள்ள அவரைக் கொன்றுபோட… அந்த தீவிரவாத அமைப்பில் இருக்கிற காவல்துறை இளைஞன், காரில் ஏற்றி வந்து ஓரிடத்தில் பிரேதத்தை வைத்துவிட்டு, ஒரு சல்யூட் அடிக்கும் போது, படம் பார்ப்பவர்கள் எல்லோரும் நெஞ்சு நிமிர்த்தி, பெருமைப்பட்டு, கர்வம் கொள்வார்கள். கண்ணில் நீர் முட்டவைக்கும் காட்சி.

இப்போது, நாசரின் பிடிக்குள் முழுவதுமாக கமல். கே.விஸ்வநாத் செய்த வேலையை கமலைக் கொண்டு செய்யவைப்பார் நாசர். தீவிரவாத அமைப்பில் இருந்து ஒரு ஆணும்பெண்ணும் கமல் வீட்டுக்கு விருந்தாளியாக வருவதும், எப்போது என்ன நடக்கும் என பகீருடன் நம்மை பிரமை பிடித்துப் பார்க்கச் செய்வதும், தீவிரவாதத்தின் உக்கிரத்தை உணர்த்தும் நிமிடக்கரைசல்கள்.

இறுதியாக, ஒரு கடிதம் எழுதி விவரம் கொட்டிவிட்டு, நாசரை சந்திக்கச் செல்வார் கமல். இங்கே, தீவிரவாதக் கூட்டத்தைச் சேர்ந்தவன், கமல் வீட்டில் இருக்கும் அர்ஜூனின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்யப் பாய்வான். அதைக் கண்ட கமலின் மனைவி கவுதமி, தடுக்க முற்பட, இப்போது கவுதமியைப் பிடித்துக்கொள்வான். அப்போது ஏற்படும் போராட்டம், அவனைக் கொன்று போட நம் கையே பரபரத்துக் கிடக்கும். கவுதமி, கொன்றேபோடுவார்.

அங்கே, நாசரிடம் மாட்டிக்கொண்ட கமல். தீவிரவாதக் கூட்டத்தில் ஊடுருவிய போலீஸ் யாரென்று கேட்க, அருகில் இருப்பவனைச் சொல்லாமல் முழுங்க, ஆனால் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார் நாசர். அந்த சமயத்தில், கமல், பாய்ந்து நாசரைக் கொன்று போட, வெளியில் இருந்து கதவைத் தட்டும் தீவிரவாதக் கூட்டம். உள்ளே அறைக்குள் இருக்கும் கமல், தன் சிஷ்யனிடம், ‘என்னைக் கொல்லு மேன். இப்போ பத்ரியும் இல்ல. இனிமே நீதான் எல்லாமே. நீதான் தலைவன். இன்னும் யார் யாரெல்லாம்னு அப்பதான் உன்னால கண்டுபிடிக்கமுடியும். என்னைக் கொல்லு. சுட்டுக்கொல்லு. கொல்லு மேன். கமான் மேன்…’ என்று சொல்ல, தீவிரவாதக் கூட்டம் கதவைத் தட்டிக்கொண்டே இருக்க, அப்போது துப்பாக்கியால் கமலை அவனே துளைத்தெடுக்க, அங்கிருந்து சுவரில் பாய்ந்து பறந்து, கர்ணகொடூரமாக இறந்துபோவார் கமல்.

‘நாயகன்’ படத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் காட்டப்படும் ரத்தம், கமல் மூலம் ரத்தமாகவே தெரியத் தொடங்கியது. காயங்கள், தழும்புகள், கெட்டிப்பட்டுக் கிடக்கும் ரத்தம், கொஞ்சம் கொஞ்சமாக உடலிலிருந்து வெளிவரும் ரத்தம் என்றெல்லாம் பிரமிக்கவைத்துக்கொண்டே இருந்த கமல்... ‘குருதிப்புனல்’ என்ற பெயருக்கேற்ப, சாயமில்லாத அக்மார்க் ரத்தத்தையும் காயத்தையும் உதடு கோணி, கண்கள் வீங்கி முகமே மாறிபோன கொடூரத்தையும் காட்டியிருந்தார்.

எல்லாம் முடிந்து, இறந்த காவலர்களுக்கு விருது. அப்போது கமலின் பையனும் ராக்கெட் லாஞ்சர் அஜய்ரத்தினத்தின் மகனும் மோதிக்கொள்வார்கள் என்பதில் குருதிப்புனல் நிறைவுறும்… அல்லது அங்கிருந்து அடுத்த ஆட்டம் தொடங்கும்.

பாடல்கள் இல்லை. இசையால் காட்சிகளுக்கு கனம் சேர்த்திருப்பார் இசையமைப்பாளர் மகேஷ். கமலின் மறக்கமுடியாத அறிமுகம். இளையராஜாவே மகேஷை கமலிடம் பயன்படுத்திக்கொள்ளச சொல்ல... ‘குருதிப்புனல்’, ‘நம்மவர்’ என இரண்டு படங்களில் மகேஷ் நம் மனங்களைத் தொட்டார். இந்தப் படம் இன்னொரு சரித்திரப் பதிவாக மாறியதற்கு கமலின் இன்னொரு காரணம்... சவுண்ட் சிஸ்டம்.

ரயில்வே ஸ்டேஷன் காட்சி, அஜய் ரத்னம் பிடிபடும் காட்சி, தியேட்டரில் ஒருவனைச் சுட்டுக்கொல்லும் இடம், நாசரை விசாரிக்கும் இடம், தீவிரவாத அமைப்பு இருக்கிற இடம், துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், இருட்டு, ஒளி என காட்சிக்குக் காட்சி கவனமாக இருந்து கவனம் ஈர்த்திருப்பார் இயக்குநர் பி.சி.ஸ்ரீராம்.

இப்போது, தடுக்கி விழுந்தால் இரண்டாம் பாகம் வரவுள்ளதாக அடிவயிற்றைக் கலக்கி அமிர்தாஞ்சன் வாங்கவைத்துவிடுகிறார்கள். ஆனால் எந்த அறைகூவலும் இல்லாமல், பார்ட் டூவுக்கான ஓபனிங் லீடு வைத்து, இயல்பாகவே முடித்திருக்கும் திரைக்கதைதான் கமலின் ஸ்பெஷல். கமலின் ட்விஸ்ட்.

1995ம் ஆண்டு, அக்டோபர் 23ம் தேதி வெளியானது ’குருதிப்புனல்’. தீபாவளியில் வெளியான அதிரிபுதிரி சரவெடி ஆட்டம்பாம். 25 வருடங்களாகிவிட்டன. இன்னமும் குருதிப்புனலுக்கு இணையானதொரு படமும் மேக்கிங்கும் இல்லை என்பது கூட, குருதிப்புனலின் தனித்துவத்துக்கான அடையாளம். ஐ.எஸ்.ஓ. போல் இது ’கமல் எஸ்.ஓ.’ முத்திரை!

25வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘குருதிப்புனல்’ படத்தை, இன்னும் நூறாண்டுகளானாலும் பிரமிப்பும் வியப்புமாகப் பார்ப்பார்கள். ‘இங்கிலீஷ் படம் மாதிரி பண்ணிருக்காங்கப்பா’ என்று புருவம் உயர்த்துவார்கள்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், கமல், அர்ஜுன், நாசர், மகேஷ், இயக்குநர் பி.சி.ஸ்ரீராம் முதலான ‘குருதிப்புனல்’ குழுவிற்கு, தேச உணர்வுடனும் கலையுணர்வுடனும் ஓர் ராஜசல்யூட்!

படம் முடிந்து, இறுகிய முகத்துடனும் கனத்த மனத்துடனும் தியேட்டரை விட்டு வெளியே வந்த போது, எல்லோருக்குள்ளும் ஒரு பயமும் கோபமும் இருந்தது. அந்த பயம் தீவிரவாதத்தின் மீது. கோபம்... நம் மீதான கோபமாகவும் இருக்கலாம்!



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்