'தில்வாலே துல்ஹனியா...' படத்தை 2 முறைதான் பார்த்திருக்கிறேன்: கஜோல் நினைவுப் பகிர்வு

By பிடிஐ

'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படத்தை இதுவரை இரண்டு முறை மட்டும் பார்த்திருப்பதாக நடிகை கஜோல் கூறியுள்ளார்.

1995 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'. ஷாரூக் கான், கஜோல் நடித்திருந்த இந்தத் திரைப்படத்தை யாஷ் சோப்ரா தயாரித்திருந்தார். ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமான இப்படம் வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 102.50 கோடி ரூபாயை வசூலித்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு ஷாரூக் கான் - கஜோல் இணை, பாலிவுட்டின் பிரபலமான திரை ஜோடிகளில் ஒன்றாக மாறியது. இருவரும் சேர்ந்து இன்னும் சில படங்களில் நடித்தனர்.

‘டிடிஎல்ஜே’ (DDLJ) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திரைப்படம் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் 25-வது ஆண்டை முன்னிட்டு படத்தின் நாயகி கஜோல் பேட்டியளித்துள்ளார்.

"கதாபாத்திரங்களை மக்கள் நேசிக்கும் வகையில் அமைந்திருந்த ஒரு கதை 'டிடிஎல்ஜே'. மரபுகளுக்கு எதிரான போராட்டக் குணம் இருக்கும் கதாபாத்திரமும், பழமைவாதக் கதாபாத்திரமும் காதலிக்கும். அந்தக் காதல் வெற்றி பெற வேண்டும் என்றும் அனைவரும் விரும்பினர். ஒரு இயல்பான உலகில் இது சாத்தியம் என அனைவரும் நம்புகின்றனர்.

ஆனால், இதுவரை நான் இந்தப் படத்தை இரண்டு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். 25 வருடங்களுக்கு முன்னால் படத்தின் ப்ரீமியர் காட்சியைப் பார்த்தேன். அதற்குப் பின் 10 வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை பார்த்தேன். அவ்வளவுதான். முதல் முறை பார்த்தவுடனேயே எனக்குப் படம் பிடித்தது.

நான் என்னைத்தான் திரையில் பார்க்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். சிம்ரன் என்கிற கதாபாத்திரத்தைப் பார்ப்பதாகத்தான் நினைத்தேன். அதுதான் இந்தப் படத்துக்கு என்னால் கொடுக்க முடியும் மிகப்பெரிய பாராட்டு.

முதலில் அந்தக் கதாபாத்திரம் எனக்கு சுவாரசியமாகத் தெரியவில்லை. ஆனால் போகப் போக அந்தக் கதாபாத்திரம் புலப்பட்டது. கிட்டத்தட்ட நமக்குத் தெரிந்த அனைவரிடத்திலும் சிம்ரனின் குணாதிசயங்கள் இருக்கும். சரியான விஷயத்தைச் செய்யும் விருப்பம் இருக்கும். ஆனால், செய்ய முடியாது" என்று கஜோல் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE