’விசிறி காமெடி, பால் காமெடி, விறாட்டி காமெடி, ஊறுகாய் காமெடி...’ ‘கஞ்சப் பிரபு’ சுருளிராஜன் - காந்திமதி ஜோடியின் சூப்பர் காமெடி; - ‘மாந்தோப்புக் கிளியே’ வெளியாகி 41 ஆண்டுகளானாலும் மறக்கவே முடியாத காமெடி! 

By வி. ராம்ஜி

கல்யாண வீடுகளில், திருவிழாக்களில், ஊர் கூடுகிற இடங்களில், ஆறேழு நாட்கள் இரவு பகலாக, இறங்காமல் சைக்கிள் ஓட்டுகிற பந்தயத்தில், பொங்கல் விழாக்களில், பாடல்கள் ஒலிபரப்புவார்கள். ‘திருவிளையாடல்’ திரைச்சித்திரம் ஒலிபரப்புவார்கள். ‘மனோகரா’ ஒலிபரப்புவார்கள். ‘16 வயதினிலே’ ஒலிபரப்புவார்கள். ‘கல்யாண பரிசு’ ஒலிபரப்புவார்கள். ‘எப்படா போடுவாங்க’ என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும்போது, அந்தப் படத்தையும் ஒலிபரப்புவார்கள். ஊருக்கே கேட்கிற லவுட் ஸ்பீக்கரின் வழியே வீடுகளுக்குள் இருக்கிறவர்களின் செவிகளைத் தொட்டு, கிச்சுக்கிச்சு மூட்டும் அந்தக் காமெடி, தமிழ் சினிமாவின் டாப் காமெடிகளில் ஒன்று. அந்தப் படம் ‘மாந்தோப்புக்கிளியே’.

எண்பதுகளில் விசு படம் வந்தது. நான்கைந்து ஜோடிகளை வைத்துக்கொண்டு, வாழ்க்கையின் அர்த்தத்தையும் குடும்ப ஒற்றுமையின் மேன்மையையும் பாடமாக, தன் படங்களில் வாழ்வியலை போதித்திருப்பார் இயக்குநர் விசு. இந்த நான்கைந்து ஜோடி, நான்கைந்து குடும்பம் என்கிற விஷயத்தைக் கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்கள் வந்தன. தனக்கென்று இதை பாணியாக வைத்துக்கொள்ளாமல், எல்லா விதமாகவும் படம் பண்ணிய இயக்குநர் எம்.ஏ.காஜா. அவரின் இயக்கத்தில், இந்த மாதிரியான விஷயத்தை எடுத்துக்கொண்டு சொன்னதுதான் ‘மாந்தோப்புக்கிளியே’.

சுதாகர், தீபா, மேஜர் சுந்தர்ராஜன், பிரவீணா, பிரேம் ஆனந்த், சாந்திவில்லியம்ஸ், சுருளிராஜன், காந்திமதி, அம்ஜத்குமார் என ஏராளமானவர்கள் நடித்திருந்தார்கள். பணம்தான் எல்லோருக்குமே பிரதானம். பொருளின்றி எதுவுமில்லை. அதேசமயம், பணம் மட்டுமே பிரதானமில்லை. பொருள்பட வாழ்தலே முக்கியம் என்கிற கருத்தைச் சொன்னதுதான் ‘மாந்தோப்புக்கிளியே’.

ஆடம்பரமாக வாழ நினைத்தால் அதைப் போல் அழிவு வேறொன்றுமில்லை. நேர்மையாக வாழ்ந்தால் அதைப் போல் நிம்மதி எதுவுமில்லை. கஞ்சத்தனத்துடன் வாழ்ந்தால் அதைப் போல் முட்டாள்தனம் எதுவுமில்லை என்பதுதான் மையக்கரு.

ஆடம்பரமாக வாழலாம் என்றிருக்கும் பிரேம் ஆனந்த், லஞ்சம் முதலான விஷயங்களில் ஈடுபட்டு இறுதியில் எதை இழக்கிறார், நேர்மையாக வாழும் மேஜர் சுந்தர்ராஜனுக்கு இறுதியில் கிடைக்கும் பரிசு என்ன, உண்மையான காதலும் ஆத்மார்த்தமான குடும்பமுமாகக் கொண்டிருக்கும் சுதாகர் - தீபாவின் வளர்ச்சி என்ன, எங்கும் கஞ்சத்தனம், எதிலும் கருமித்தனம் என்றிருக்கும் சுருளிராஜன் - காந்திமதி கடைசியில் இழந்தது என்ன என்பதையெல்லாம், டைரக்‌ஷன் ‘டச்’களுடனும் பளீர் பொளேர் வசனங்களுடனும் காமெடியுடனும் அதிகமான கிளாமருடனும் சொல்லியிருப்பார் எம்.ஏ.காஜா.

பிரவீணா, தீபா, இன்னும் நான்கைந்து நடிகைகள் என யார் காட்சியில் இருந்தாலும் கேமிரா கோணங்கள், ‘ஒருமாதிரி’யாகவே வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து, படம் தாக்கத்தை ஏற்படுத்தியதுதான், மையக்கருவுக்குக் கிடைத்த வெற்றி.

ஒரு கிராமம், இரண்டு தெருக்கள், ஒரு பங்களா, கார், தார்ச்சாலை, தோப்பு, குளம் என லோகெஷன் குறைவுதான். அநேகமாக, மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் படத்தின் கலெக்‌ஷன் எகிடுதகிடாக அமைந்தது.

எம்.ஏ.காஜா, ‘ராம் - ரஹீம்’ என்ற பெயரில் கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்தது பலருக்கும் தெரிந்திருக்கலாம். இரண்டுபேர் சேர்ந்து கதை வசனம் எழுதினார்கள். இவர்களில் ரஹீம் என்பது எம்.ஏ.காஜா. ராம் என்பது யார் தெரியுமா? இயக்குநர் இராம.நாராயணன். ஆரம்பகாலத்தில், இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ‘மாந்தோப்புக்கிளியே’ படத்தின் கதையும் வசனமும் இவர்கள்தான். இயக்கம் எம்.ஏ.காஜா.

சங்கர் கணேஷ் இசை. எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. ‘வெள்ளிக்கிழமை விடிகாலை’, ‘மாந்தோப்புக்கிளியே’, ’பூவும் மலர்ந்திருக்கு’, ‘மச்சானைப் பாரு’ , ‘புள்ளிமான் போல’... என எல்லாப் பாடல்களும் கிராமிய மணம் கமழ அமைக்கப்பட்டிருந்தன. எல்லாப் பாடல்களையும் வாணி ஜெயராமும் மலேசியா வாசுதேவனும் பாடியிருந்தார்கள்.

‘காசேதான் கடவுளடா’ என்ற படத்தில் எல்லோரும் பிரமாதமாக நடித்திருந்தார்கள். ஆனாலும் எல்லோரையும் விட, சாமியாராக நடித்த தேங்காய் சீனிவாசன் தன் நடிப்பாலும் மெட்ராஸ் பாஷையாலும் வெளுத்துக் கட்டியிருப்பார். படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலம் சேர்த்தார். அதுபோல இந்தப் படத்தில், நடித்தவர்கள் எல்லோருமே மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்கள். என்றாலும் மொத்தப் படத்தின் வெற்றியை பல அங்குலங்கள் உயர்த்தியவர்... சுருளிராஜன். ‘கஞ்சத்தனம் காசிநாதன்’ என்ற கேரக்டரில், படம் முழுக்க அலப்பறையைக் கொடுத்திருப்பார். காந்திமதியுடன் சேர்ந்துகொண்டு வெடிக்க வெடிக்கச் சிரிக்க வைத்திருப்பார். விசிறியைப் பயன்படுத்தும் விதம், உலகில் மிகப்பெரிய கஞ்சனைப் பார்க்கச் சென்ற போது நடந்த விஷயங்கள், சாணி, பால், ஊறுகாயைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் கஞ்ச ஐடியா... என்று அழகாக, சுருளிராஜனின் கேரக்டர் டெவலப் செய்யப்பட்டிருக்கும்.

தீபாவுக்கு சண்டைக் காட்சி, காட்சிக்குக் காட்சி கொஞ்சம் கிளாமர், வழக்கமான சோக சுதாகர் என்றெல்லாம் இருந்தாலும் சுருளிராஜன் - காந்திமதி காமெடிக்காகவே படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள் ரசிகர்கள். காமெடியில் சக்கைப்போடு போட்டு, வசூல் மழையை பொழிந்தது ‘மாந்தோப்புக்கிளியே’.

1979ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியானது ‘மாந்தோப்புக்கிளியே’. படம் வெளியாகி 41 ஆண்டுகளாகின்றன. ‘கஞ்சத்தனமான காமெடி’தான் என்றாலும் வள்ளலென வாரி வாரி வழங்கிய ‘மாந்தோப்புக்கிளியே’ படத்தை, அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியுமா என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE