லண்டன் லெஸ்டர் ஸ்கொயரில் ஷாரூக் கான் - கஜோல் சிலை: அடுத்த வருடம் திறப்பு

By செய்திப்பிரிவு

லண்டனின் லெஸ்டர் ஸ்கொயரில் இருக்கும் 'சீன்ஸ் இன் தி ஸ்கொயர்' திரைப்படச் சிலைகள் வரிசையில், ஷாரூக் கான் மற்றும் கஜோல் நடித்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படத்தின் காட்சியும் இடம்பெறவுள்ளது.

லண்டனின் முக்கிய சுற்றுலாத் தளமாக லெஸ்டர் ஸ்கொயர் பகுதி விளங்குகிறது. இங்கு 'சீன்ஸ் இன் தி ஸ்கொயர்' என்கிற பெயரில் பிரபல திரைப்படக் காட்சிகள், நடிகர்கள், கதாபாத்திரங்களின் சிலைகள் இடம்பெற்றுள்ளன. மிஸ்டர் பீன், ஹாரிபாட்டர், பேட்மேன் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் சிலைகள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. 'சிங்கிங் இன் தி ரெய்ன்' திரைப்படத்தின் ஒரு காட்சியும் சிலையாக வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் வசந்த காலத்தில் இந்தச் சிலைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஷாரூக் கான் மற்றும் கஜோல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லெஸ்டர் ஸ்கொயரும் இந்தத் திரைப்படத்தின் ஒரு காட்சியில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் நீண்ட காலமாக திரையரங்கில் ஓடிய திரைப்படம் என்கிற சாதனையைப் படைத்திருக்கும் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படத்தின் சிலையும் நிறுவப்படவுள்ளது. ஷாரூக் கான் மற்றும் கஜோலின் சிலைகள் இதில் இடம்பெறவுள்ளன. இந்தத் திரைப்படம் வெளியாகி இது 25-வது வருடம் என்பதும், படத்தைத் தயாரித்த யாஷ் ராஜ் ஃபிலிம்ஸுக்கு இது துறையில் 50-வது வருடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா சோப்ராவின் முதல் படமான இது இந்தியத் திரையுலகில் வரலாறு படைத்த திரைப்படங்களில் ஒன்று. வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 102.50 கோடி ரூபாயை வசூலித்தது. இன்றைய மதிப்பில் இது கிட்டத்தட்ட 524 கோடி ரூபாய்க்குச் சமமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE