'பேய் மாமா' கதைக்களம்: ஷக்தி சிதம்பரம் வெளிப்படை

'பேய் மாமா' படத்தின் கதைக்களம் குறித்து ஷக்தி சிதம்பரம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பேய் மாமா'. ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். முழுக்க காமெடியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது.

இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 'பேய் மாமா' படத்தின் இசையை வெளியிட்டார். இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, அம்ரீஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

'பேய் மாமா' விழாவில் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசியதாவது:

"'பேய் மாமா' படம் ஒரு குட்டி காஞ்சனாவாக இருக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் படத்திற்கு எல்லா ஹீரோக்களுக்கும் ஒரே மரியாதையைத்தான் கொடுப்பேன். அது ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி யோகி பாபுவாக இருந்தாலும் சரி. என் உயிர் நண்பர் பொன்குமரன் இந்தப் படத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டதில் இருந்து நிறைய உழைத்திருக்கிறார். அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை அவருக்குக் கொடுத்துவிட்டேன்.

இந்தப் படத்தில் யோகிபாபுவை நடிக்கச் சொல்லி பேசிக் கொடுத்த நண்பர் ரவிமரியாவுக்கு நன்றி.

தீய டாக்டர்கள் ஒரு வைரஸைப் பரப்பி நோயை உண்டாக்குகிறார்கள். அதில் பாதிக்கப்படும் ஒருவரை மூலிகையைத் தயாரிக்கும் ஒரு குடும்பம் காப்பாற்றுகிறது. இதனால் கோபமடைந்த அவர்கள் மூலிகை தயாரிக்கும் குடும்பத்தைக் கொன்று விடுகிறார்கள். இறந்தவர்கள் பேயாக யோகி பாபு மீது வருகிறார்கள். இதுதான் படத்தின் கதை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் படத்தை உருவாக்கினோம். ஆனால், இப்போது கதைக்களம் கரோனாவோடு ஒன்றிவிட்டது. கரோனாவை விரட்டும் பேய் மாமாவாக யோகி பாபு இருப்பார். கரோனா முடியும் நேரத்தில் இந்தப் படம் வெளியாக இருப்பது சந்தோஷம். இந்தப்படம் திரையரங்கில்தான் வெளியாகும். இது திரையரங்கிற்கான படம்".

இவ்வாறு ஷக்தி சிதம்பரம் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE