என் பயோபிக்கில் நடிக்க வேண்டாம்; விலகிக் கொள்ளுங்கள்: விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவானது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே, தனது பயோபிக்கிற்கு வரும் எதிர்ப்புகள் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் முத்தையா முரளிதரன். அதையும் தாண்டி எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே உள்ளன.

இந்நிலையில், தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முத்தையா முரளிதரன்.

இது தொடர்பாக முத்தையா முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"என்‌ மீதுள்ள தவறான புரிதலால்‌ '800' படத்திலிருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதிக்கு சிலர்‌ தரப்பில்‌ இருந்து கடுமையான அழுத்தம்‌ தருவதை நான்‌ அறிகிறேன்‌. எனவே என்னால்‌ தமிழ்‌நாட்டின்‌ ஒரு தலைசிறந்த கலைஞன்‌ பாதிப்படைவதை நான்‌ விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதியின்‌ கலைப் பயணத்தில்‌ வருங்காலங்களில்‌ தேவையற்ற தடைகள்‌ எற்பட்டுவிடக்கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன்‌,

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒருபோதும்‌ நான்‌ சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்காலத் தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு உத்வேகத்தையும்‌ மன உறுதியையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்கச் சம்மதித்தேன்‌. அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட்டுள்ளன .

நிச்சயமாக இந்தத் தடைகளையும்‌ கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌, அவர்கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும்,‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்,‌ தமிழ்‌த் திரைப்படக் கலைஞர்களுக்கும்,‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர்களுக்கும்,‌ பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌".

இவ்வாறு முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE