சம்பளம் வாங்காமலேயே நடிக்கும் யோகி பாபு; பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

நான் சம்பள விஷயத்தில் பெரிய கறார் கிடையாது என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பேய் மாமா'. ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். முழுக்க காமெடியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது.

இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 'பேய் மாமா' படத்தின் இசையை வெளியிட்டார். இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, அம்ரீஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

'பேய் மாமா' விழாவில் யோகி பாபு பேசியதாவது:

"ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னைக் கதாநாயகனாக நிற்க வைத்துள்ளார். ரொம்பப் பயமாக இருக்கிறது. இந்தப் படம் முதலில் வடிவேலு சாருக்காகத்தான் பண்ணியது என்று ஷக்தி சார் சொன்னார். உடனே "சார், வடிவேலு சார் ஜீனியஸ். அதனால் எனக்கு எப்படி சார் செட்டாகும்" என்று கேட்டேன். பின்பு கதையைக் கூறினார். பிடித்திருந்ததால் நடித்துள்ளேன்.

நான் சம்பள விஷயத்தில் பெரிய கறார் கிடையாது. என் மேலாளரிடம் வேண்டுமானால் கேட்டுக் கொள்ளுங்கள். சமீபத்தில் கூட ஒரு பெண் அசோசியேட் இயக்குநர், "ஒரு கதை வைத்துள்ளேன். நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும், என்னிடம் பெரிய பட்ஜெட் இல்லை. இந்தப் படம் நடந்தால்தான் எனக்குத் திருமணம் நடக்கும்" என்றார்.

உடனே சம்பளமே இல்லாமல் நடிக்கிறேன்மா. உனக்கு முதலில் திருமணம் நடக்கட்டும் என்று சொன்னேன். இப்படி நிறைய விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் ஷக்தி சிதம்பரம் சார் வசனத்தில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் ட்ரெய்லரில் சொன்னது போலவே, நான் காமெடியன்தான்".

இவ்வாறு யோகி பாபு பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE