யோகி பாபு இண்டர்நேஷனல் ஸ்டார் ஆகிவிடுவார்; திரையரங்குகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

By செய்திப்பிரிவு

'பேய் மாமா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பேய் மாமா'. ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். முழுக்க காமெடியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது.

இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 'பேய் மாமா' படத்தின் இசையை வெளியிட்டார். இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, அம்ரீஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

'பேய் மாமா' விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:

"2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், தொலைக்காட்சியில்தான் எனக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை என்பதைப் பார்த்தேன். பல்வேறு ஜாம்பவான்கள் வகித்த துறை அது. அப்போது முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு அமைச்சரையும் அழைத்து இந்தத் துறையில் என்ன பணிகள் எல்லாம் வரும் என்று வகுப்பு எடுத்தார்கள். அப்போது என்னை அழைத்து இந்தத் துறை சார்ந்து சொன்னார்.

சினிமாவும் உங்களிடம் தான் வரும். அது கரண்ட் மாதிரி. ஸ்விட்ச் போட்டால் லைட் எரியும். அதே ஸ்விட்ச்சை மாற்றிப் போட்டால் ஷாக் அடிக்கும். ஆகையால் சினிமாவை மட்டும் ரொம்ப கவனமாகக் கையாளுங்கள் என்று சொன்னார்.

அவர் மறைவுக்கு முன்பு சட்டப்பேரவையில் கடைசியாகப் பேசியது திரைத்துறை பற்றித்தான். வாகை சந்திரசேகர் கேட்ட கேள்விக்கு, நான் எழுந்து பதிலளிக்கும் முன்பு முதல்வரே எழுந்து பதிலளித்தார். அது திரைத்துறை விருதுகள் பற்றிய கேள்விதான். அவர் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு கடைசியில் பேசியதே திரைத்துறை பற்றியதுதான். தமிழக அரசு விருதுகள் அறிவித்துவிட்டாலும், இன்னும் வழங்கவில்லை. படங்களுக்கான மானியம் மட்டும் 145 படங்களுக்கு தலா 7 லட்ச ரூபாய் வழங்கியுள்ளோம்.

எம்ஜிஆர் படங்கள், பாடல்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தோம். நாங்கள் அரசியல் படித்ததே திரையரங்குகளில்தான். ஆகையால் திரையரங்குகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்பதைச் சூசகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்ஜிஆர் நடிப்பில் சுமார் 140 படங்கள் வெளியாகின. அதில் 5 படங்களில் மட்டும் அவர் இறந்து போனது மாதிரியான காட்சிகள் வரும். அது போக மீதமுள்ள படங்கள் அனைத்தையும் சுமார் 30,40 முறை பார்த்திருப்பேன். அந்தப் படங்கள் எல்லாம் பார்த்துத்தான் சினிமா மீதே ஈடுபாடு வந்தது. ஆகையால், சினிமா என்பது எனக்குள்ளே ஊறிப்போனது.

கரோனா என்ற வைரஸ் நம்மை எல்லாம் முடக்கிவிட்டது. ஒரு தலைமுறையே கண்டிராத பெரிய பேரிடரை கரோனா நிகழ்த்தியுள்ளது. கரோனாவை யாரும் இதுவரை பார்த்ததில்லை. அதேபோல் தான் பேயை யாரும் பார்த்ததில்லை. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும் போது, கரோனாவை இந்த 'பேய் மாமா' விரட்டும் என்றார். அப்படி விரட்டினால் உலக அளவில் இந்தப் படத்துக்கு விருது கிடைக்கும்.

பேய் இருக்கா இல்லியா என்று தெரியாது. ஆனாலும் பேய் என்றால் பயம்தான். பேயை வைத்து கரோனாவை ஒழிப்பேன் என்ற தீம் நல்ல தீம். இயக்குநர் ஷக்தி சிதம்பரம் நல்ல சாதுரியமானவர். அவர் எடுத்த நிறைய நல்ல படங்கள் உள்ளன. இந்தப்படம் ரொம்ப நல்லா வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்னதான் ஓடிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் படம் பார்ப்பதுதான் சுகம்.

வார இறுதி நாட்கள் என்றாலே தியேட்டர்தான் பொழுதுபோக்கு. அதனால் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பயப்பட வேண்டாம். சீரியல் முதற்கொண்டு சினிமா ஷூட்டிங் வரை எல்லாத்திற்கும் அனுமதி படிப்படியாக கொடுத்தோம். அதேபோல் சினிமா தியேட்டர் திறப்பது பற்றி ஓரிரு நாளில் நல்ல முடிவுகளைச் சொல்வோம்.

இந்த 'பேய் மாமா' படம் வெளிவரும்போது நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் வரும். அதனால் யோகி பாபு, ஷக்தி சிதம்பரம் படத்தின் தயாரிப்பாளர் யாரும் கவலைப்பட வேண்டாம். கோவா திரைப்பட விழாவில் நமது தமிழ்ப் படங்களும் திரையிடப்படுவதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். நான் வருடா வருடம் அங்கு போவேன். நம் படங்களுக்கு அங்கு நல்ல மரியாதை இருக்கிறது.

'பேய் மாமா' வித்தியாசமான கதைக்களம் உள்ள படம் என்பதால் இந்தப் படமும் கண்டிப்பாக திரைப்பட விழாக்களில் பேசப்படும். அதனால் யோகி பாபு இண்டர்நேஷனல் ஸ்டார் ஆகிடுவார். எல்லாத்துறைகளைப் போல இந்தச் சினிமாத் துறையும் தன்னிறைவு பெற்ற துறையாக விளங்கும்''.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE