'புத்தம் புதுக் காலை' குழுவினரைச் சாடியுள்ள நட்டி

By செய்திப்பிரிவு

'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜி படக்குழுவினரைச் சாடியுள்ளார் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகியுள்ள ஆந்தாலஜி 'புத்தம் புதுக் காலை'. இதில் ஐந்து குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜி விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த குறும்படங்கள் அனைத்துக்கும் பொதுவான கரு கரோனா நெருக்கடியால் இருக்கும் ஊரடங்கு, எதிர்காலத்துக்கான நம்பிக்கை. பிரபலங்கள் பலரும் இந்த ஆந்தாலஜியைப் பாராட்டி வரும் வேளையில், பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி இதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜி தொடர்பாக நட்டி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"புத்தம் புதுக் காலை. ஆகக் கொடுமை. வாழ்த்துக்கள். தாங்க முடியலடா சாமி. கர்ப்பமுற்றால் ஸ்பெனிஷ் பாட்டு பாடுவோம். எங்களுக்கு ஸ்பெனிஷ் தெரியுமே. ஆகச் சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது. நீங்கள் தோல்வியுற்ற நெறிமுறைகளைப் பாருங்கள். மற்றவர்களுக்கு நிரூபிக்க அதிக நேரம் எடுக்கும். தயவுசெய்து ஒரு தலைமுறையைக் கொன்று விடாதீர்கள். இடைவெளி கொடுங்கள். இடைவெளி கிடைக்கும்"

இவ்வாறு நட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகினர் மத்தியில் நட்டியின் இந்தப் பதிவுகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் முன்னணி இயக்குநர்கள் பணிபுரிந்துள்ள ஆந்தாலஜி, ஒரு குறும்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE