சர்ச்சைக் கேள்விகளைத் தவிர்க்க ஊடகங்களைத் தவிர்க்கும் சாரா அலி கான்

சர்ச்சைக் கேள்விகளைத் தவிர்க்க தனது அடுத்த திரைப்படமான 'கூலி நம்பர் 1'-க்கான விளம்பரங்கள், செய்தியாளர் சந்திப்புகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று நடிகை சாரா அலி கான் முடிவெடுத்துள்ளார்.

1995-ம் ஆண்டு கோவிந்தா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'கூலி நம்பர் 1' என்கிற திரைப்படம் வருண் தவான் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இரண்டு படங்களையுமே வருண் தவானின் தந்தை டேவிட் தவான் இயக்கியுள்ளார். ரீமேக்கில் நாயகியாக சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் வார இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதே கிறிஸ்துமஸ் தினத்தில் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது.

எப்போதும் போல படத்தை விளம்பரப்படுத்த ஊடகச் சந்திப்புகள், நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான சாரா அலி கானிடம், ஊடகத்தினர் தேவையில்லாத கேள்விகள் கேட்டுச் சர்ச்சையை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஊடகச் சந்திப்புகளை மொத்தமாகத் தவிர்க்க சாரா முடிவு செய்துள்ளார். சுஷாந்தின் மரணம் தொடர்பான விசாரணையில், சமீபத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவினராலும் சாரா விசாரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாராவின் தந்தையும், பாலிவுட் நடிகருமான சைஃப் அலி கானும், சாரா பேசாமல் மௌனம் காப்பதே இந்தச் சூழலில் சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் வாரிசு அரசியல் பற்றிய கேள்விகளைத் தவிர்க்க, தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகத்தினரிடம் மட்டுமே டேவிட் தவான் மற்றும் வருண் தவான் பேசுவார்கள் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE