'800' பட சர்ச்சை: முத்தையா முரளிதரன், ராதிகா கருத்துகளுக்கு சீனு ராமசாமி பதிலடி

By செய்திப்பிரிவு

'800' படத்தின் சர்ச்சை தொடர்பாக முத்தையா முரளிதரன், ராதிகா கருத்துகளுக்கு சீனு ராமசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். '800' படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைக் கடுமையாக விமர்சித்துப் பதிவுகளை வெளியிட்டு இருந்தார் ராதிகா சரத்குமார்.

தனது பயோபிக்கிற்கு வரும் எதிர்ப்புகள் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் முத்தையா முரளிதரன். அதில் தனது தரப்பு விஷயங்களைக் கூறியிருந்தார். இவை அனைத்துக்கும் பதிலளிக்கும் விதமாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பந்துவீச்சாளரின் கடிதத்தில் பள்ளிப் பருவத்து போர்ச்சூழல்கள் வருத்தமே. ஆனால், முரண்பாடுகள் ரணமாக இருக்கும்போது எழுதி நூலாக தமிழில் வெளிவராத ஒரு பயோகிராபியை எப்படி சந்தேகிக்காமல் இருப்பார்கள்? சுயசரிதையை உள்ளூரில் தமிழில் ஏன் வெளியிடவில்லை?.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மீது மக்களும் தலைவர்களும் கலைஞர்களும் வைத்திருக்கும் பாசம் அவர்களது வேண்டுகோளில் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி.

தன் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்யும் முழு உரிமை நடிகருக்கு உண்டு. ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் அது சாத்தியப்படாமல் முரண்பாடுகள் உள்ள நாடு இது. இம்ரான்கானாக ஷாருக்கான் நடிக்க முடியுமா? அவ்வளவுதான்.

ஆஸ்பத்திரி, அப்பளம், விமானம், ஐபிஎல் பயிற்சியாளர் பணி கருத்து பரப்புமா?. இதற்கும் நடிப்பு சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? இது முரண்பாட்டைத் தீர்க்குமா? என் மரியாதைக்குரிய சகோதரி ராதிகா சரத்குமார்...

சகோதரி குஷ்புவுக்கு வணக்கம். முன்னாடி நீங்க மணியம்மையாராக நடிச்சீங்க. இப்ப நடிக்க முடியுமா?. சகோதரி நடிப்பு சுதந்திரம் வேற. சமூகப் பரப்பில் ஒரு நடிகருக்கு உண்டாகும் மாற்றம். இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைவரும் வந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE