கஜினி முகமதுவைவிட அதிகமான போராட்டங்களைச் சந்தித்தேன்: 'நுங்கம்பாக்கம்' இயக்குநர் ரமேஷ் செல்வன் பேச்சு 

கஜினி முகமதுவை விட அதிகமான போராட்டங்களைச் சந்தித்தேன். ஒரு ஆபாசப் படத்தை எடுத்திருந்தால் சுலபமாக ஜெயித்திருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால்தான் இவ்வளவு கஷ்டம் என்று இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசினார்.

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் 'நுங்கம்பாக்கம்'. தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியக் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார் ரமேஷ் செல்வன். இப்படம் வரும் 24 ஆம் தேதி சினிஃப்ளிக்ஸ்( Cineflix)என்ற ஓடிடியில் வெளியாகிறது.

இதை முன்னிட்டு இன்று படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவிதேவன், நடிகர்கள் அஜ்மல், ஆர்.என்.ஆர்.மனோகர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியதாவது...

"இரண்டரை வருடப் போராட்டம். கஜினி முகமதுவை விட அதிகமான போராட்டங்களைச் சந்தித்தேன். நான் 80% உண்மையாக இருப்பவன். சினிமாவில் சில விஷயங்களை செய்யவே முடியாது. ஒரு ஆபாசப் படத்தை எடுத்திருந்தால் சுலபமாக ஜெயித்திருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால்தான் இவ்வளவு கஷ்டம்.

இந்தப் படத்தின் டீஸர் வெளிவந்த பின் பெரிய ரீச் ஆனது. அப்போதே வியாபாரத்திற்கு வழி கிடைத்தது. ஆனால், இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என பெண்ணின் தந்தை கேஸ் போட்டுவிட்டார். அந்தப் பெண் செத்து மூன்று மணி நேரம் யாருமே அருகில் செல்லவில்லை. இந்தப்படத்தின் கதையை ரைட்டர் சூளைமேட்டில் ஒவ்வொரு தெருத்தெருவாகப் போய் எழுதினார். இந்தப் படத்தில் சைபர் க்ரைம், காவல்துறை முதற்கொண்டு பல விஷயங்கள் உள்ளன.

இந்தப் படத்தை இயக்கியதால் என்னைக் கைது செய்யவேண்டும் என்று போலீஸார் சென்சார் அதிகாரி பக்கிரிசாமியிடம் போய் கேட்டார்கள். நான் பெங்களூரில் போய் ஒளிந்துகொண்டு பின் பெயில் வாங்கியதும் வந்தேன். நான் ஏழு படங்கள் இயக்கியவன். ஆனால் என்னைப் போலீஸ் 10 கொலைகளைச் செய்தவன் போல நடத்தியது.

நிறைய சிரமங்கள், அலைச்சல்களுக்குப் பிறகு காவல்துறையில் பலரையும் சந்தித்துக் கதை சொல்லி அவர்களிடம் 6 மாதம் கழித்துதான் லெட்டர் கிடைத்தது. அதன்பின் சென்சார் போனேன். அங்கு பெயர், டைட்டில் ஆகியவற்றை மாற்றச் சொன்னார்கள். பின் க்ளைமாக்ஸை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை. பின் ஆறு மாதப் போராட்டம். அது முடிந்ததும் சிலர் வழக்குப் போட்டார்கள். அதன்பின் ஒரு வழக்கு வந்தது. அதையும் சமாளித்து படத்தை வெளியிட நினைத்தால் கரோனா பரவல் வந்துவிட்டது.

தற்போது சினிஃப்ளிக்ஸ் (Cineflix) என்ற ஓடிடியில் படம் வரும் 24-ஆம் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தை அனைத்து கேபிள் இணைப்புகளில் 77 ஆம் நம்பரை ரிமோட்டில் அழுத்திப் பார்க்கலாம். தயவுசெய்து ₹49 ரூபாய் கட்டிப் பார்க்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை பைரஸி எடுக்காதீர்கள். ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார்கள்".

இவ்வாறு ரமேஷ் செல்வன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE