வசூலில் தோல்வியடைந்தாலும் மக்களின் அன்புக்கு நன்றி: 'ஷாஷாங் ரிடம்ப்ஷன்' குறித்து மார்கன் ஃப்ரீமேன்

By செய்திப்பிரிவு

'ஷாஷாங் ரிடம்ப்ஷன்' திரைப்படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தாலும் மக்கள் அதற்குத் தந்திருக்கும் அன்புக்குத் தான் என்றும் நன்றியுடன் இருப்பதாக நடிகர் மார்கன் ஃப்ரீமேன் தெரிவித்துள்ளார்.

1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஷாஷாங் ரிடம்ப்ஷன்'. ஸ்டீஃபன் கிங் எழுதிய நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை ஃப்ராங் டாரபாண்ட் இயக்கியிருந்தார். மார்கன் ஃப்ரீமேன், டிம் ராபின்ஸ் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படம் வெளியான சமயத்தில் வசூல் ரீதியாக தோல்விப் படமாகவே இருந்தது.

அந்த நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த 'ஃபாரஸ்ட் கம்ப்', 'பல்ப் ஃபிக்‌ஷன்' உள்ளிட்ட படங்களின் போட்டி, பெண் கதாபாத்திரங்கள் இல்லாதது, குழப்பமான தலைப்பு என படத்தின் தோல்விக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

ஆனால், பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 'ஷாஷாங் ரிடம்ப்ஷன்' விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்த அங்கீகாரங்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. ஐஎம்டிபி இணையதளத்தில் 9.2 புள்ளிகளுடன் இன்றளவும் முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் இது.

இந்தப் படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படத்தில் நடித்திருந்த மார்கன் ஃப்ரீமேன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதில், "'ஷாஷாங் ரிடம்ப்ஷன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகிவிட்டன.

வசூல் ரீதியில் தோல்வியடைந்த எங்கள் திரைப்படத்தை, திரைப்பட வரலாற்றில் அதிகம் விரும்பப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய அனைவருக்கும், நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று கூறியுள்ளார். மேலும் படத்தில் தனக்குப் பிடித்த வசனம் ஒன்றையும் ஃப்ரீமேன் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE