இந்தியா அழகையும், ஒற்றுமை மீதான நம்பிக்கையையும் இழந்து வருகிறது: பி.சி.ஸ்ரீராம் காட்டம்

By செய்திப்பிரிவு

இந்தியா தனது அழகையும், ஒற்றுமை மீதான நம்பிக்கையையும் இழந்து வருகிறது என்று பிசிஸ்ரீராம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தில் ஒரு பிரிவான டனிஷ்க், நகைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பண்டிகை காலத்தையொட்டி புதிய விளம்பரப் படம் ஒன்றை டனிஷ்க் வெளியிட்டது. மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தியே இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், இணையத்தில் ஒரு தரப்பு, இந்த விளம்பரம் லவ் ஜிகாதை விளம்பரப்படுத்துகிறது எனக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தது.

இது தொடர்பாக ஒரு தரப்பு ஆதரவாகவும், இன்னொரு தரப்பு எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார்கள். பெரும் சர்ச்சை உருவானதால் இறுதியில் இந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றது டனிஷ்க் நிறுவனம். இந்த விளம்பரத்துக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பதிவில் கருத்துகளை வெளியிட்டு இருந்தார் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.

தற்போது டனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரம் சர்ச்சையாகி நீக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"காதல் மொழி பேசும் ஓர் அழகான விளம்பரம், அன்பை நேசிப்பவர்களைக் காட்டிலும் அன்பை வெறுப்பவர்களால் திரும்பப்பெறப்பட்டுள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக இந்தியா தனது அழகையும், ஒற்றுமை மீதான நம்பிக்கையையும் இழந்து வருகிறது. இப்படியே சென்றால் எதிர்கால சந்ததி வெறுப்பு தான் அன்பின் புதிய அர்த்தம் என்றல்லவா புரிந்துகொள்ளும்"

இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE