‘’இளையராஜா என்னை சாமியாரிடம் அழைத்துச் சென்றான். இளையராஜா, ஜேசுதாஸ், நான் மூவரும் சாமியாரிடம் சென்றோம். எனக்கு சாமியார் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. இளையராஜாவுக்கு ரொம்பவே உண்டு. அந்த சாமியார் என்னைப் பார்த்து சொன்னதைக் கேட்டு ஷாக்காகிவிட்டேன். இவருக்கு எப்படித் தெரியும்?’’ என்று பாரதிராஜா தெரிவித்தார்.
இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதள சேனலில், தன் வாழ்க்கை அனுபவங்களை, திரையுலக அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
‘’கோகிலாபுரம் பக்கத்தில் காளாப்பட்டியில் பெண் பார்த்த கதையைச் சொன்னேன். நிச்சயமெல்லாம் முடிந்தது. அது எங்கே உடைந்தது தெரியுமா?
நான் பெண் பார்த்துவிட்டு, சென்னைக்குச் சென்று விட்டேன். அவர்கள் ஒருநாள்... சந்தைக்கு வந்தார்கள். தேனி சந்தை. ’இவ்ளோ தூரம் வந்துட்டோம். பொண்ணு பாக்க வந்தாங்களே, அவங்க வீட்டுக்கும் போய் பாத்துட்டுப் போயிருவோம்’னு வந்தாங்க. அந்தசமயம் பார்த்து, என்னுடைய அம்மா, சின்னமனூருக்கு ஒரு வேலையாகப் போயிருந்தார்கள். வீடு பூட்டியிருந்தது. அப்பாவும் இல்லை. வீட்டில் யாருமே இல்லை. வந்து பார்த்தார்கள். கதவு பூட்டியிருந்தது. செண்டிமெண்டாக நினைத்துவிட்டார்கள். ’முதமுதல்ல மாப்பிளை வீட்டுக்கு வரோம். இப்படி பூட்டிக்கிடக்குதே’ என்று அவர்களுக்குள் பேச்சு.
அந்த ஊருக்கு சென்றிருந்த போது நான் பேண்ட் போட்டிருந்தேனே. அந்த ஊரில் நான் ஒருவன் தான் பேண்ட் போட்டிருந்தேன். ’அவன் வந்த சீரே சரியில்ல்லை’ என்று பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் சொல்லிவிட்டார்கள். அந்தப் பெண்ணுக்கு 48 ஆடுகள், இவ்வளவு நகைநட்டு என்று பேசுவார்கள். ’அவன் சினிமாக்காரன். இருக்கிற நகையையெல்லாம் வித்துட்டு, உன்னை நடுரோட்ல நிப்பாட்டிட்டுப் போயிருவான்’ என்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அதனால், நிச்சயம் எல்லாம் முடிந்தாலும் கூட பிரேக் ஆகிவிட்டது.
என்ன செய்வது? நம் ஜாதகம் இப்படி இருக்கிறது. இந்த மூணு பயகளுக்கும் கல்யாணம் நடந்துவிட்டது. பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன். கங்கை அமரனுக்கும் ஒரு கோயிலில் கல்யாணம் செய்துவைத்துவிட்டோம். என்னதான் செய்வது? வாழ்க்கையின் லட்சியம்... டைரக்டராகி கல்யாணம் செய்வதா? கல்யாணம் செய்த பிறகு டைரக்டராவதா? என்று ஒரே குழப்பம்.
என்னுடைய அப்பா ரொம்பவே துவண்டுவிட்டார். அவருக்கு மூன்று சகோதரிகள். அதில் ஒருவர் இளைய சகோதரி. தங்கை. அவருக்கு மூன்று மகள்கள். ரொம்பநாள் பகையில் இருந்தோம். அப்பாவுக்கு சொந்தத்தில் பெண் எடுக்கவேண்டும் என்று ஆசை. அம்மாவுக்கும் அதே எண்ணம்தான்.’நாளைக்கு உன் வீட்டுக்கு வந்தா, கஞ்சித்தண்ணியாவது குடிக்கமுடியும்டா. எவளோ ஒருத்தியைக் கூட்டிக்கிட்டு வந்து, அந்நியத்துல பொண்ணு எடுத்து, எதுக்குடா வம்பு?’ என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள்.
என்னுடைய அத்தை. தேவதானப்பட்டிக்குப் பக்கத்தில் தும்பலப்பட்டி என்று ஒரு கிராமம். எங்க ஊர் அல்லிநகரத்தில் இருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்தார்கள். அந்தப் பொண்ணு சின்னப்புள்ளையாக இருக்கும்போதே பார்த்திருக்கிறேன். என்னுடைய மாமனார் தும்பலப்பட்டிக்காரர். அந்தப் பெண், உசிலம்பட்டியில் படித்தார். பிறகு காலேஜ் போய் படித்தார். கேள்விப்பட்டிருக்கிறேன். பழக்கம் கிடையாது. இப்போது இருக்கிறானே மனோஜ்குமார். அப்போது சின்னப்பையன்.
தும்பலப்பட்டிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சொந்தத்தில் பெண் எடுக்கவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். சரியென்று சொல்லிவிட்டேன். சென்னைக்கு வந்துவிட்டேன்.
கல்யாணத்தை தேனியில் வைத்துக்கொள்ள முடிவானது. இரு தரப்பிலும் சம்பிரதாயங்களெல்லாம் முடிந்தது. அப்போது என்னுடைய முதலாளி கே.ஆர்.ஜி, அப்போது இரண்டு மூன்று படங்கள் எடுத்துவிட்டு, நொடித்துப் போன நிலையில் இருந்தார். கே.ஆர்.ஜி. என்றாலே சினிமாவில் எல்லோருக்கும் தெரியும். அவர் கடைசியாக எடுத்த படம் மிகப்பெரிய நஷ்டம். அந்தக் கஷ்டத்திலும் அவர் என்னிடம் ஐயாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். அந்தக் காலத்தில் ஐயாயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. ‘போய் கல்யாணத்தைப் பண்ணிட்டு வா’ என்றார். ’நீங்க வந்துருங்க முதலாளி, உங்க தலைமைலதான் கல்யாணம்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
கோயம்புத்தூரில் இருந்து குடும்பத்தோடு காரில் வந்தார். அவர் தலைமையில்தான் திருமணம் நடந்தது. மிகப்பெரிய தயாரிப்பாளர். இப்போது அவர் இல்லை. அப்பாடா... ஒருவழியாக திருமணம் முடிந்தது. இளையராஜாவுக்கு கல்யாணம் முடிந்தது. எல்லாப் பயல்களுக்கும் கல்யாணம் முடிந்தது.
’கல்யாணம் முடிச்ச நேரம்’ என்று இப்போதும் என் மனைவி சொல்லுவாள். ஆல்ரெடி... ‘16 வயதினிலே’ கதை டிஸ்கஷனில் இருக்கிறது. முதலாளி ராஜ்கண்ணு எடுப்பதாக முடிவு. கல்யாணமாகி மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.
இளையராஜா அப்போது நன்றாக முன்னுக்கு வந்துகொண்டிருந்தான். ஜேசுதாஸ் கச்சேரியெல்லாம் வாசிக்க ஆரம்பித்துவிட்டான். அதன் பிறகு என் மனைவி கர்ப்பமானார். பிரசவத்துக்கு ஊருக்கு அனுப்புவார்கள். நானும் அனுப்பிவைத்தேன். நான் டிஸ்கஷனில் இருக்கவேண்டும். பட வேலையைத் தொடங்கவேண்டும்.
இளையராஜாவுக்கு தெய்வ நம்பிக்கை கொஞ்சம் ஜாஸ்தி. சாமியார்களையெல்லாம் ரொம்பவே நம்புவான். அதேமாதிரிதான் ஜேசுதாஸும். எனக்கு இந்த சாமியாரையெல்லாம் பிடிக்காது. ஒருநாள்... நான், இளையராஜா, ஜேசுதாஸ் மூன்று பேரும் திருவல்லிக்கேணியில் ஒரு சாமியாரைப் பார்க்கப் போயிருந்தோம். ’சரி... சும்மா போவோமே’ என்று போனேன்.
போனோம்... என்னவோ சொன்னார். இவர்களும் ஏதோ சொன்னார்கள். அவர் சொல்லச் சொல்ல தலையாட்டிக்கொண்டே இருந்தார்கள். என்னை ஒரு பார்வை பார்த்தார். என்னைப் பற்றி இளையராஜா சொன்னான். உடனே அவர், ‘உங்க வீட்ல ஊருக்கு அனுப்பிச்சிருக்கீங்களா?’ என்று கேட்டார். ஷாக்காகிவிட்டேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் எப்படி இப்படிச் சரியாகச் சொன்னார்? என்று குழப்பம். ’ஆமாம்’ என்றேன்.
‘நீங்க உடனே கிளம்பி, உங்க குலதெய்வத்தை போய் கும்பிடுங்க. அப்புறமா உங்க மனைவியைப் போய் பாருங்க’ என்றார். எனக்கு ஒரே குழப்பம். ‘என்னய்யா இது. இந்த ஆளுக்கு எப்படித் தெரியும்?’ ‘என் ஒய்ஃபை டெலிவரிக்கு ஊருக்கு அனுப்பிச்சிருக்கறது எப்படித் தெரியும்?’என்று ஆச்சரியம்.
வெளியே வந்து, இளையராஜாவிடம் பத்து ரூபாய் கேட்டேன். அவன் ஆயிரம் கதை சொன்னான். அப்புறம் அவனிடம் பத்து ரூபாயைப் பிடுங்கிக்கொண்டு, ’இந்த ஆளு சொன்னாரே, போய் பாப்போம்’ என்று கிளம்பினேன். என் குலதெய்வம் எது என்றே தெரியாது எனக்கு. விசாரித்து தெரிந்துகொண்டேன். உசிலம்பட்டி பக்கத்தில் கருமாத்தூர்தான் குலதெய்வம் என்று தெரிந்துகொண்டேன். முதல்முறையாக குலதெய்வக் கோயிலுக்குச் சென்றேன்.
இன்றைக்கும் என் படங்களைப் பார்த்தால், ‘என் இனிய தமிழ் மக்களே’வுக்கு முன்னதாக ஒரு காளைமாடும் கோயிலும் வரும். போய் சாமி கும்பிட்டுவிட்டு, விபூதி வாங்கிக்கொண்டு போனேன். மனைவி சீரியஸ். மஞ்சக்காமாலை. அதிர்ந்துபோனேன். நல்லபடியாக குழந்தை பிறந்தது. அந்தப் பையன் தான் மனோஜ்’’.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago