விஜய் சொல்லும் குட்டிக் கதைகளின் ரசிகன் நான்: காளிதாஸ் ஜெயராம்

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாக்களில் பேசும் பேச்சுக்கு தான் ரசிகன் என்று நடிகர் காளிதாஸ் ஜெயராம் கூறியுள்ளார்.

மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். தமிழில் 'ஒரு பக்கக் கதை' என்கிற திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகவிருந்தார். அந்தப் படம் முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை. பின்பு 'மீன்குழம்பும் மண் பானையும்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் பெரிய வாய்ப்புகள் வராத நிலையில் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்களில் காளிதாஸ் நடித்து வருகிறார். தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவுள்ள 'புத்தம் புதுக் காலை' என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இயக்குநர் சுதா கொங்கராவின் 'இளமை இதோ இதோ' என்கிற குறும்படத்தில் காளிதாஸ் நடித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரி மாணவரான காளிதாஸ், அதே கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் ஒருவரான நடிகர் விஜய்யின் ரசிகர். விஜய் போலவே குரல் மாற்றிப் பேசி ஒரு பொது நிகழ்ச்சியில் அசத்தியிருப்பார். சமீபத்தில் இந்து தமிழ் திசை இணையதளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏன் நடிகர் விஜய்யை அதிகம் பிடிக்கும் என்று காளிதாஸ் பேசியுள்ளார்.

"நான் மிகப்பெரிய விஜய் ரசிகன். எனக்கு எல்லா நடிகர்களுமே பிடிக்கும், ஆனால் குறிப்பாக விஜய் அவரது திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் பேசும் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அவரது படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆள் கிடையாது. ஆனால் என்றாவது உற்சாகம் குறைந்து இருக்கும் போது, மனம் சோர்வாக இருக்கும் போது அவரது பேச்சைக் கேட்டால் போதும். உற்சாகம் வந்துவிடும்.

சமீபத்தில் கூட அப்படி ஒரு நாள் நான் ஊக்கமற்று இருந்த போது 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் அவரது பேச்சைக் கேட்டேன். உடனடியாக ஊக்கம் வந்தது. அவர் எங்கு இந்த உரைகளைத் தயார் செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அவரது குட்டிக் கதைகளின் ரசிகன் நான்" என்கிறார் காளிதாஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE