கரோனா அச்சுறுத்தல்: தயாரிப்பாளர்களுக்கு க்யூப் நிறுவனம் சலுகை

கரோனா அச்சுறுத்தலால் நஷ்டமடைந்துள்ள தயாரிப்பாளர்களுக்கு க்யூப் நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் திரையுலக பணிகள் யாவுமே 100 நாட்களுக்கு மேல் நடைபெறவில்லை. சில நாட்களுக்கு முன்பு தான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது. அதிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, மாநில அரசுகள் பலவும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கின.

திரையரங்க வெளியீடு தொடர்பாகவும் மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டாலும், கரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாநிலங்கள் இன்னும் திரையரங்க திறப்புக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும், தயாரிப்பாளர்களுக்கு கரோனா அச்சுறுத்தலால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாளை (நவம்பர் 15) முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், அனைத்து திரையுலகிலும் என்னென்ன படங்கள் வெளியீடு என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே க்யூப் நிறுவனம் தயாரிப்பாளர்களுக்கு 50% சலுகை அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:

"வெர்ச்சுவல் ப்ரிண்ட் ஃபீ எனப்படும் விபிஎஃப் (VPF) தொகை 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறைந்தபட்சம் 7 காட்சிகள் என்ற அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டதிலிருந்து இந்த வருடம் டிசம்பர் 31 வரை இந்த தள்ளுபடி இருக்கும். பழைய திரைப்படங்களுக்கு விபிஎஃப் தொகை வசூலிக்கப்பட மாட்டாது. டெலிவரி சார்ஜஸ் மட்டுமே வசூலிக்கப்படும்”

இவ்வாறு க்யூப் நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE