’அவன் ரெட்டை வேஷம் போடுறான்யா’ என்று மிகச் சாதாரணமாகச் சொல்லிவிடலாம். வாழ்க்கையில் அப்படி ரெட்டை வேடம் போடுவதும் ஈஸியான விஷயம்தான். ஆனால் திரையில் இரட்டை வேடம் என்பது மிகப்பெரிய வேலை. ‘என்னது டபுள் ஆக்ஷன் மிகப்பெரிய வேலையா? ஒரு நடிகரை ஸ்க்ரீன் முழுக்க நூறு உருவங்களாக உலவவிட முடியும்’ என்பது இன்றைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உலகில், பீட்ஸா ஆர்டர் பண்ணுவது போல் சாதாரணமான விஷயமாக இருக்கலாம். ஆனால்... அந்தக் காலத்தில்?
எம்ஜிஆரும் சிவாஜியும் இரட்டை வேடங்கள் போட்டு நடித்த காலத்தில் இருந்துதான், நமக்கு டபுள் ஆக்ஷன் படங்கள் நன்றாகப் பரிச்சயம். கமலும் ரஜினியும் வந்தார்கள். அவர்களுக்குப் பிறகு சத்யராஜ், விஜயகாந்த் என்று தொடங்கிப் போய்க்கொண்டிருந்தது. பின்னர் அஜித் டபுள் ஆக்ஷன் படங்களில் ஆர்வம் காட்டினார். விஜய்யும் அதில் நுழைந்தார். இன்று வரைக்கும் டபுள் ஆக்ஷன் படங்கள், புதுப்புது ஹாட் பாக்ஸ்களில் வைத்து அதே கதையைக் கொஞ்சம் சுடவைத்துக் கொடுக்கப்படுகிறது. இதற்கெல்லாம் ஆரம்பம் ஒன்று இருக்கும்தானே. டபுள் ஆக்ட் படங்களுக்கு ஆரம்பம்... அநேகமாக ‘உத்தமபுத்திரன்’ படம்தான்!
‘ஆமாம்பா... ‘உத்தமபுத்திரன்’ல சிவாஜி பின்னியிருப்பார்’ என்று சிவாஜி நடித்த ‘உத்தமபுத்திரன்’ படத்தைப் பற்றிச் சொல்லுவோம்.
உண்மைதான். ‘உத்தம புத்திரன்’ சூப்பர் படம் தான். அதில் சிவாஜி, வெளுத்து வாங்கியிருப்பார்தான். ஆனால், இந்த ‘உத்தமபுத்திரன்’ படத்துக்கு முன்னதாக வேறொரு ‘உத்தமபுத்திரன்’ வந்திருக்கிறார். அந்த ‘உத்தம புத்திரன்’... பி.யு,சின்னப்பா.
» இந்த ஆண்டில் வாழ்க்கையை பற்றிய மோசமான விஷயங்களை கற்றுக் கொண்டேன் - ஸ்ருதி ஹாசன்
» 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்: தபு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்?
இன்றைக்கு அஜித் - விஜய் என்கிறோம். முன்னதாக, கமல் - ரஜினி என்றோம். அதற்கும் முன்பு எம்ஜிஆர் - சிவாஜி என்றோம். அதுக்கும் மேலே... என்று பார்த்தால், அப்போதும் இரண்டு பேர் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தார்கள். உச்சத்தில் இருந்தார்கள். சினிமாவை வளர்த்தெடுத்தார்கள். மக்களை தியேட்டருக்கு வரவழைப்பவர்களாக இருந்தார்கள். வசூல் சக்கரவர்த்திகளாக இருந்தார்கள். அந்த இரண்டுபேரையும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வைத்துக் கொண்டாடியது தமிழ் சினிமா உலகமும் ரசிக வெள்ளமும்! அவர்கள்... எம்.கே.டி. தியாகராஜ பாகவதரும் பி.யு,சின்னப்பாவும்.
எம்.கே.டி., பாட்டுப்பாடி ரசிகர்களை இழுத்தார். கரவொலிகளைப் பெற்றார். பி.யு.சின்னப்பா, தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். பிரமிக்க வைத்தார். அப்படி அவர் பிரமிக்கச் செய்ததன் ஆரம்பம்தான் ‘உத்தம புத்திரன்’.
அதற்கு முன்பும் சின்னப்பாவின் படங்கள் வந்திருந்தன. அவற்றையெல்லாம் பார்க்க ரசிகர்கள் படையெடுத்துத்தான் வந்தார்கள். ஆனாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சின்னப்பாவுக்கும் ஏற்றத்தைக் கொடுக்கவில்லை. இந்த காலகட்டத்தில், தனி ஒருவனாக எம்.கே.டி. தியாகராஜ பாகவதர், மளமளவென உயர்ந்துகொண்டே இருந்தார். முன்னுக்குச் சென்று கொண்டே இருந்தார். இந்தச் சமயத்தில், பி.யு.சின்னப்பா ரொம்பவே துவண்டுபோனார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் துறவு வாழ்க்கை போல், தனித்தே இருந்தார். அவருக்கு என்னானது என்ன செய்கிறார் என்றே எவருக்கும் தெரியவில்லை.
அந்த சமயத்தில்தான், மாடர்ன் தியேட்டர்ஸ் பி.யு.சின்னப்பாவை தேடிச்சென்று அழைத்தது. ‘இந்தப் படத்தில் நடியுங்கள். படம் வந்த பிறகு உங்களுக்குப் பிரகாசமான வாழ்க்கை கிடைக்கப் போகிறது’ என்று மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் நம்பிக்கை வார்த்தைகளைக் கொடுத்தார். ஒப்பந்தம் போடப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கியது. படம் எடுத்து முடிக்கப்பட்டது. வெளியானது. பி.யு.சின்னப்பாவின் ரசிகர்கள் படம் பார்க்க வந்தார்கள். எம்.கே.டி.யின் ரசிகர்கள் படம் பார்க்க வந்தார்கள். ஒட்டு மொத்த மக்களும் படம் பார்க்க வந்தார்கள். மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அந்தப் படம்தான் ‘உத்தம புத்திரன்’.
ஆங்கிலப் பட பாணியில் படமெடுப்பதில் மாடர்ன் தியேட்டர்ஸ்தான் முன்னோடி. நமக்கு ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்களை அறிமுகப்படுத்தியதும் இந்தக் கம்பெனிதான். எம்ஜிஆரை வைத்து ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்று முதல் கேவா கலர் படத்தைத் தந்ததும் இந்த நிறுவனம்தான். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், பி.யு.சின்னப்பாவுக்கு மிகப்பெரிய டேக் ஆஃப் கொடுத்த படமாக தந்ததுதான் ‘உத்தமபுத்திரன்’.
1940-ம் ஆண்டு, அதாவது சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, ‘உத்தமபுத்திரன்’ வெளியானது. புகழ் மிக்க ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனம்தான் இந்தப் படத்தைத் தயாரித்தது. வழக்கம்போல் இந்த நிறுவனத்தின் டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் எனும் பெருமையைப் பெற்றவர்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா, இரட்டை வேடத்தில் நடித்ததுதான் அந்தக் காலத்தில் பிரேக்கிங் நியூஸ்.
படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில்தான் போடப்பட்டது. டைட்டில் ‘உத்தம புத்திரன்’ என்று ஹீரோவைக் குறிக்கும் வகையில் இருந்தாலும் டைட்டிலில், எம்.வி.ராஜம்மாவின் பெயர்தான் முதலில் போடப்படுகிறது. அதேபோல், தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, வசனம், பாடல்கள் இன்னபிற என்றெல்லாம் போட்டுவிட்டுத்தான் நடிகர்கள் பெயர் போடப்படுகிறது. டி.எஸ்.பாலையா, என். எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், காளி என்.ரத்தினம் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
அந்தக் காலத்திலேயே இப்படியெல்லாம் எடுக்கமுடியுமா என்று வியக்கும் அளவுக்கு தொழில்நுட்ப நேர்த்தியுடன் வெளியான ‘உத்தமபுத்திரன்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். திரையிட்ட ஊர்களிலெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இந்தப் படத்தின் மூலம், தயாரிப்பாளருக்கு ஐந்து லட்ச ரூபாய் லாபம் கிடைத்தது என்றால், படத்தின் தாக்கத்தையும் அந்தக் காலத்து ஐந்து லட்ச ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இப்போது வரும் படங்களை ‘இது அந்தப் படத்தின் தழுவல்’, ‘அது இந்த மொழிப் படத்தின் காப்பி’ என்றெல்லாம் படம் ஆரம்பித்த பதினைந்தாவது நிமிடத்திலேயே சொல்லிவிடுகிறார்கள் ரசிகர்கள். இந்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் ‘தி மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டது என்பது அப்போதைய ரசிகர்களுக்குத் தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் ‘ஹாலிவுட் படத்தோட தரத்துக்குக் குறையாம பண்ணிருக்காங்கப்பா’ என்று இன்னும் கொண்டாடியிருப்பார்கள் பி.யு.சின்னப்பாவின் ‘உத்தமபுத்திரன்’ திரைப்படத்தை!
1940-ம் ஆண்டு வெளியானது இந்தப் படம் (அக்டோபர் 14ம் தேதி). இதன் பின்னர், 18 வருடங்கள் கழித்து, அதாவது 1958-ம் ஆண்டு, மீண்டும் அதே தலைப்பில், கிட்டத்தட்ட அதே கதையுடன் உருவாகி வெளியானது ‘உத்தமபுத்திரன்’. வீனஸ் பிக்சர்ஸ் எனும் புகழ்மிக்க நிறுவனம் தயாரித்தது. இதில் இயக்குநர் ஸ்ரீதரும் பங்குதாரர். சிவாஜிகணேசன், பத்மினி, நம்பியார், தங்கவேலு, எம்.கே.ராதா, ஓஏகே.தேவர், பி.கண்ணாம்பா முதலானோர் நடித்திருந்தனர். சிவாஜி டபுள் ஆக்ஷன். பின்னாளில் ஒன்பது வேடங்களிலெல்லாம் நடித்து அசத்திய சிவாஜிக்கு, முதல் டபுள் ஆக்ஷன் படம் இதுதான்!
இதே 58ம் ஆண்டு எம்ஜிஆர் தன் புதுப்படத்துக்கான பூஜையை போட்டார். விளம்பரமும் கொடுத்தார். இரட்டை வேடங்களில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தின் பெயர்... ‘உத்தம புத்திரன்’. ஆனால் என்ன நினைத்தாரோ... படத்தின் பெயரை மாற்றினார். மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற அந்தப் படம்... ‘நாடோடி மன்னன்’.
40ம் ஆண்டு ‘உத்தமபுத்திரன்’ படத்தில் நடித்த பி.யு.சின்னப்பா, இதன் பின்னர் மூன்று வேடங்களில் நடித்தார். ஐந்தாறு வேடங்களிலும் நடித்தார் என்பார்கள்.
எது எப்படியோ... ‘டபுள் ஆக்ட்’ கதைக்கு தமிழில் ஒரு ரூட் போட்டுக்கொடுத்தவர் ‘உத்தமபுத்திரன்’ தான்!
40ம் ஆண்டு வெளியானது ‘உத்தம புத்திரன்’. படம் வெளியாகி 80 ஆண்டுகளாகின்றன.
நூற்றாண்டு கொண்டாடிய தமிழ் சினிமாவில், எண்பது ஆண்டுகளாகிவிட்ட ‘உத்தமபுத்திரன்’ திரைப்படத்தையும் முதல் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பாவையும் எத்தனையோ படங்களைக் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய புகழ் மிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தையும் கொண்டாடுவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
48 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago