11வது மெல்பர்ன் இந்திய திரைப்பட விழா: ரிஷி கபூர், இர்ஃபான் கான், சுஷாந்த் சிங் உள்ளிட்டோருக்கு அஞ்சலி

By பிடிஐ

11வது மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் இடம்பெறப்போகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் மறைந்த பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், இர்ஃபான் கான், சுஷாந்த் சிங் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் 8 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வில் 17 மொழிகளைச் சேர்ந்த 60 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மாற்றுத் திறன் மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட விஷயங்களை பேசும் ‘நட்கட்’ மற்றும் ‘ஹப்படி’ ஆகிய இரண்டு திரைப்படங்களுடன் இவ்விழா தொடங்கவுள்ளது.

இது குறித்து மெல்பர்ன் இந்திய திரைப்பட விழா இயக்குநர் மிது போமிக் லாங்கே கூறும்போது, “இந்தியாவின் சுயாதீன குறும்பட இயக்குநர்கள் முதல் வலிமையான பெரிய இயக்குநர்கள் வரை அனைவரும் சுதந்திரம் மற்றும் சமத்துவம் குறித்த விஷயங்களில் தங்கள் பார்வையை செலுத்தி வருகின்றனர். திரையங்கிலோ அல்லது வீட்டிலோ மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு மிகப்பெரும் சக்தியாக திரைப்படம் இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் 34 சர்வதேச திரைப்படங்களும் 50 ஆஸ்திரேலிய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் ‘லோர்னி: தி ஃப்ளான்யூர்’, ‘தி இல்லீகல்’, ‘ரன் கல்யாணி’ உள்ளிட்ட முக்கிய படங்கள் திரையிடப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் நடக்கவிருந்து ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்வு வரும் அக்டோபர் 23 முதல் 30 வரை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE