விவசாயிகளை தீவிரவாதி என விமர்சித்த விவகாரம்: கங்கணா மீது கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு

By ஐஏஎன்எஸ்

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவ்வாறு போராடும் விவசாயிகளுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து தனது கருத்துகளை பகிர்ந்தார்.

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை சட்டத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள் தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கிறார்கள். இந்த சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் எல்லாம் தீவிரவாதிகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிராக கர்நாடகத்தில் ரமேஷ் நாயக் என்ற வழக்கறிஞர், தும்கூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ந‌டிகை கங்கனா ரனாவத்தின் பதிவு விவசாயிகளின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இளைஞர்களின் மனதில் கெட்ட எண்ணங்களை விதைக்கும் வகையிலும், வன்முறைக்குத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே கங்கனா ரனாவத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A, 504, 108 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தும்கூரு நீதுமன்றம் நடிகை கங்கணா மீது வழக்குப் பதிவி செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்த சூழலில் நேற்று (14.10.2020) க்யாத்சாந்த்ரா காவல் நிலையத்தில் கங்கணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் ரமேஷ் நாயக் ஐஏஎன்எஸ் நிறுவனத்திடன் கூறியதாவது:

எந்தவித பப்ளிசிட்டிக்காகவும் நடிகை கங்கணா மீது நான் வழக்கு தொடுக்கவில்லை. அவர் கூறியது தவறு என்பதை அவருக்கு உணர்த்தவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அரசு கொண்டு வரும் ஒரு சட்டத்தை எதிர்த்து போராட இறங்குபவர்கள் அவர் நினைப்பது போல தீவிரவாதிகள் அல்ல. நானும் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறேன், நானும் தீவிரவாதியா? இதை அவர் எனக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE