குழந்தைத்‌ திருமணத்தை முடிவுக்குக்‌ கொண்டுவர புதுமையான தீர்வுகளை ஆராய்வோம்‌: த்ரிஷா

By செய்திப்பிரிவு

குழந்தைத்‌ திருமணத்தை முடிவுக்குக்‌ கொண்டுவருவதற்கான புதுமையான தீர்வுகளை ஆராய்வோம்‌ என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் அக்டோபர் 11-ம் தேதி உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் யுனிசெஃப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ணத் தூதுவராக இருக்கும் த்ரிஷா, இணையம் வழியே குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், குழந்தைத் திருமணத்தை நிறுத்துவதிலும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் முனைப்புடன் செயல்பட்டவர்களுக்கு இணையம் வழியே வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் த்ரிஷா பேசியதாவது:

"குழந்தைத்‌ திருமணத்தின்‌ ஆபத்துகள்‌ மற்றும்‌ நீண்டகாலத் தாக்கங்கள்‌ குறித்து சமூகத்தில்‌ விழிப்புணர்வை ஏற்படுத்திய இளம்‌ சாம்பியன்களைச் சந்திப்பதில்‌ நான்‌ பெரு மகிழ்ச்சியடைகிறேன்‌. குழந்தைகளை உடல்‌ ரீதியாகவும்‌, பாலியல்‌ ரீதியாகவும்‌ வன்கொடுமை செய்வதிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்க அவர்கள்‌ தங்கள்‌ சகாக்களுடன்‌ இணைந்து பணியாற்றினர்‌. கோவிட் - 19 காலத்தில்‌ இவை அனைத்தும்‌ முயற்சி செய்யும்‌ நேரமாக இருந்தபோதிலும்‌, இது குழந்தைகளை எவ்விதத்திலும்‌ பாதிக்கவில்லை.

வளரிளம்‌ பருவத்தினர்‌ மற்றும்‌ இளைஞர்களின்‌ இந்த முயற்சிகள்‌ தைரியமானவை, பாராட்டத்தக்கவை. அவர்களின்‌ நம்பமுடியாத அளவிலான இந்த முயற்சிகளுக்கு வணக்கம்‌ செலுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்‌"

இவ்வாறு த்ரிஷா பேசினார்.

மேலும், வளரிளம்‌ பருவப் பெண்களுக்கான சவால்கள்‌ மற்றும்‌ வாய்ப்புகளை எதிர்கொள்வதன்‌ முக்கியத்துவத்தை வலியுறுத்திய த்ரிஷா, “முடிவெடுப்பவர்கள்‌ அவர்களைக்‌ கணக்கில்‌ கொண்டு, அவர்களுக்குச்‌ செவிசாய்த்து, அவர்களின்‌ கல்வி மற்றும்‌ திறன்களில்‌ முதலீடு செய்யும்‌ ஒரு சிறந்த உலகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின்‌ கட்டாயத்‌ தேவை. பாலின அடிப்படையிலான வன்கொடுமை மற்றும்‌ குழந்தைத்‌ திருமணத்தை முடிவுக்குக்‌ கொண்டுவருவதற்கான புதுமையான தீர்வுகளை ஆராய்வோம்‌" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE