டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி மீது ஷாரூக் கான், ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட 34 நிறுவனங்கள் வழக்கு

ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய சேனல்களுக்கு எதிராக நான்கு பாலிவுட் சங்கங்களும் 34 பாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களும் வழக்குத் தொடர்ந்துள்ளன.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து செய்தி ஊடகங்கள், பாலிவுட்டை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தும் விதமாக செய்திகளை ஒளிபரப்பியதை எதிர்த்து இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி, பிரதீப் பண்டாரி மற்றும் டைம்ஸ் நவ்வின் ராகுல் ஷிவ்ஷங்கர், நவிகா குமார் ஆகியோரின் பெயர்கள் இந்த வழக்கில் வாதிகளின் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேனல்கள் பாலிவுட்டுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் எதிராகப் பொறுப்பற்ற, இழிவான மற்றும் அவதூறான விஷயங்களைப் பேசுவதை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட், ஆமிர் கானின் ஆமிர் கான் புரொடக்‌ஷன்ஸ், அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ், அனில் கபூர் ஃபிலிம்ஸ், யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ், ரிலையன்ஸ் பிக் எண்டர்டெய்மெண்ட் உள்ளிட்ட அனைத்து முக்கியத் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த வழக்கில் இணைந்துள்ளன.

"சுத்தம் செய்யப்பட வேண்டிய அழுக்கு பாலிவுட்தான் என்பது போன்ற கருத்துகள், பாலிவுட்டை அழுக்கு, சாக்கடை, கறை படிந்தது, போதை உட்கொண்டவர்கள் என்று குற்றம்சாட்டிய, இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்ததைத் தொடர்ந்தே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது" என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புகாரில், இந்த சேனல்கள் பாலிவுட்டுக்கு எதிராக ஒளிபரப்பிய அவதூறான விஷயங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும், நீக்க வேண்டும். அதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாலிவுட் ஆளுமைகளைப் பற்றிய ஊடகங்களின் நீதி விசாரணையை நிறுத்த வேண்டும் என்றும், பாலிவுட் சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், இந்த சேனல்களும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பேரும், கேபிள் டெலிவிஷன் நேட்வொர்க் விதிகளில் இருக்கும் நிகழ்ச்சிக்கான வரைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளின் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தால் பாலிவுட்டைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா நெருக்கடியால் அதிக வருவாய் இழப்பும், வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. பாலிவுட் உறுப்பினர்களின் அந்தரங்க உரிமைகள் மீறப்படுகின்றன.

ஒட்டுமொத்த பாலிவுட்டையும் குற்றமுள்ளவர்கள், போதை கலாச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று சொல்வதால் பாலிவுட் உறுப்பினர்களின் நற்பெயருக்குச் சரி செய்ய முடியாத பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE