நடிப்பு என்பது ஒரு சிக்கலான கலை: மனோஜ் பாஜ்பாயீ

By ஐஏஎன்எஸ்

நடிப்பு என்பது ஒரு சிக்கலான கலை என்று நடிகர் மனோஜ் பாஜ்பாயீ கூறியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் மனோஜ் பாஜ்பாயீ. ராம்கோபால் வர்மா இயக்கிய ‘சத்யா’ படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து ‘காவ்ன்,’ ‘ஜூபைதா’, ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தனது இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர் மனோஜ் பாஜ்பாயீ. கடந்த மாதம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கின்போது பட்ட இன்னல்களை விளக்கும் வகையில் ‘பம்பாய் மெய்ன் கா பா’ என்ற போஜ்பூரி பாடலைப் பாடி நடித்திருந்தார். இப்பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ஒரு நடிகனாக தன் திறமையின் மேல் தனக்கு எப்போதும் சந்தேகம் இருப்பதாக மனோஜ் பாஜ்பாயீ கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:

“ஒரு நடிகனாக என் திறமையின் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் இருக்கிறது. நடிப்பு என்பது ஒரு சிக்கலான கலை. நம்மை நிதானமாகவோ அல்லது நம்பிக்கையுடனோ இருக்கவிடாத ஒரு கலை. இதில் நாம் தினமும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

இதில் எந்தத் தவறும் நிகழ்ந்து விடக்கூடாது. இது கற்றலுக்கான ஒரு களம். சுய சந்தேகம் என்ற விஷயத்தை ஒவ்வொரு நடிகனும் தினமும் கடந்தாக வேண்டும்”.

இவ்வாறு மனோஜ் பாஜ்பாயீ கூறியுள்ளார்.

அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூரஜ் பெ மங்கள் பாரி’ என்ற படத்தில் மனோஜ் பாஜ்பாயீ நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE