யானைக்கும் அடி சறுக்கும்; சிஎஸ்கே குறித்து அவதூறு பேச வேண்டாம்: தயாநிதி அழகிரி வேண்டுகோள்

யானைக்கும் அடி சறுக்கும். சிஎஸ்கே குறித்து அவதூறு பேச வேண்டாம் என்று தயாநிதி அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துபாயில் நேற்று (அக்டோபர் 10) நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. 170 ரன்களைத் துரத்திய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்விக்குப் பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கடுமையாகச் சாடினார்கள். தோனியின் கேப்டன்சியைப் பலரும் விமர்சித்தார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இது மன வருத்தத்தைத் தருகிறது என்பது எனக்குத் தெரியும். நமக்கு இது பழக்கம் கிடையாது. சிஎஸ்கே என்றுமே நம்மை இப்படி ஒரு சூழலில் வைத்திருந்ததில்லை. அதற்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். பல வருடங்கள் ப்ளே ஆஃபுக்கே தகுதி பெறாத அணிகள் இருக்கின்றன. யானைக்கும் அடி சறுக்கும். எனவே, அவதூறு பேச வேண்டாம்.

வாழ்நாள் முழுவதும் சிஎஸ்கே ரசிகன்தான். ஐபிஎல்லில் எங்களுக்கு அற்புதமான தருணங்களைத் தந்திருக்கிறீர்கள். இன்று ஒரு உயிர் சிஎஸ்கே ரசிகனாக, தோனி ரசிகனாக, சிஎஸ்கே ப்ளே ஆஃபுக்குத் தகுதி பெறும் என்று நான் தொடர்ந்து நம்புவேன். சூழல் கடினம்தான். ஆனால், நான் அற்புதங்களை நம்புகிறேன். நேர்மறையாக இருப்போம். நம்மால் முடிந்த குறைந்தபட்ச செயல் அதுதான். நமது சிஎஸ்கேவை நாம் ஆதரிப்போம்".

இவ்வாறு தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE