இயக்குநர் ராம் பிறந்த நாள் ஸ்பெஷல்: யாராலும் நிராகரிக்கப்பட முடியாத படைப்பாளி

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்களில் ரசிகர்கள், விமர்சகர்கள், சினிமா ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினராலும் பெரிதும் மதிக்கப்படுபவர்களில் ஒருவரான ராம் இன்று (அக்டோபர் 11) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவரான ராம் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர்-இயக்குநர் தங்கர்பச்சானிடம் சில படங்களில் பணியாற்றினார். பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியின் 'புகார்', 'லஜ்ஜோ' உள்ளிட்ட இந்திப் படங்களின் திரைக்கதை உருவாக்கத்தில் ராமின் எழுத்துப் பங்களிப்பு இருந்தது.

தான் இயக்கத் திட்டமிட்டிருந்த ஆங்கிலப் படத்தின் ஒளிப்பதிவுக்கு மூத்த இயக்குநர் - ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவை நாடினார். அந்தப் படம் தொடங்கப்படவில்லை என்றாலும் பாலு மகேந்திராவுக்கும் ராமுக்கும் இடையிலான ஆசிரிய-மாணவ உறவுக்கான தொடக்கமாக அது அமைந்தது. அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றாவிட்டாலும் அவரையே தன்னுடைய சினிமா ஆசானாகக் கருதுகிறார் ராம். சினிமாவின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் பாலு மகேந்திராவிடமிருந்தே கற்றுக்கொண்டதாக ராம் பதிவு செய்திருக்கிறார்.

2006-ல் முதல் படத்தை இயக்கத் தொடங்கினார். 'தமிழ் எம்.ஏ' என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்தப் படம் 'கற்றது தமிழ்' என்று பெயர் மாற்றம் பெற்றது. ராமைப் போலவே தமிழில் எம்.ஏ. படித்த நாயகனாக ஜீவா நடித்தார். தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்புத் திறமை வாய்ந்த கதாநாயகியரில் ஒருவரான அஞ்சலி இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார்.

2007 அக்டோபர் 6 அன்று வெளியான 'கற்றது தமிழ்' விமர்சன ரீதியான பாராட்டுகளைத் தாண்டி தமிழ்ச் சூழலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. உலகமயமாக்கலால் குறிப்பாக அப்போது வளர்ந்துவந்த தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கிடைத்த அளவு கடந்த முக்கியத்துவத்தால் சமூகத்தில் நிகழ்ந்த ஏற்றத்தாழ்வுகளை விரிவாகவும் ஆழமாகவும் பேசிய அந்தப் படம் மிக அழகான காதலையும் அன்புக்கு ஏங்கும் மனங்களின் பரிதவிப்பையும் உள்ளடக்கியிருந்தது.

தனிநபர் உணர்வு சார்ந்த காதல், அன்பு, காமம், திருமணம், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றுக்கும் சமூக விவகாரங்களாகப் பார்க்கப்படும் வணிகம், பொருளாதாரம், உலகியல் மாற்றங்கள் ஆகியவற்றுக்கும் இருக்கும் தொடர்பை உணர்த்திய படமாகவும் 'கற்றது தமிழ்' அமைந்தது. வெற்றிகரமான திறமையான நடிகராக அறியப்பட்டிருந்த ஜீவாவின் நடிப்புத் திறன் வியக்கத்தக்க அளவில் வியாபித்து நின்ற படம் இது. படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நா.முத்துக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களும் சாகாவரம் பெற்றவை. இந்தப் படத்தில் தொடங்கி ராம்-யுவன்–முத்துக்குமார் கூட்டணி அடுத்தடுத்த படங்களில் பல உயரங்களைத் தொட்டுக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் அழியாத் தடம் பதித்தது.

ராமின் இரண்டாம் படமான 'தங்கமீன்கள்' பொருளாதாரம் சார்ந்த உலகியல் நோக்கங்களுக்கும் அன்பு, பாசம் போன்றவற்றை முதன்மைப்படுத்தும் மனநிலைக்கும் இடையிலான மோதலால் ஒரு குடும்பத்தில் ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசியது.

இந்தப் படத்தில் மகள் மீது மட்டற்ற பாசம் கொண்ட தந்தையாக ராமே முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடல் (நா.முத்துக்குமார்), சிறந்த தமிழ்ப் படம் ஆகிய தேசிய விருதுகளையும் சிறந்த படம், சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதையும் வென்றதோடு விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது 'தங்கமீன்கள்'.

மூன்றாவதாக ராம் இயக்கிய 'தரமணி' உலகமயச் சூழலால் விளைந்திருக்கும் அதி நவீன வாழ்க்கையில் ஆண்-பெண் உறவுச் சிக்கல்கள் அடைந்திருக்கும் புதிய பரிமாணங்களும் நவீன வாழ்க்கை முறையைப் பின்பற்றும் பெண்கள் ஆண்மையப் பார்வைகொண்ட சமூகத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் காத்திரமாகப் பேசிய படம். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படம் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்படவிழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டது.

ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி பதின்ம வயதை அடையும்போது அவளுக்கு ஏற்படும் பாலியல் சார்ந்த உணர்வுகள் அதைக் கையாள முடியாமல் வழிகாட்டவும் தெரியாமல் தடுமாறும் தந்தை ஆகியோரின் கதைதான் இந்தப் படம். இதன் மூலம் இயற்கையின் முரண்களைக் கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். மாற்றுத்திறனாளிகளின் வயதுக்கேற்ற தேவைகள் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பருவ வயதில் அரும்பும் உணர்வுகளைச் சரியாகக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வெளியாகி விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

13 ஆண்டு திரைப் பயணத்தில் நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் ராம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகப் பலரால் கொண்டாடப்படுபவர். சமூக அரசியல் பிரக்ஞையுடையவராக அதே நேரம் அது சார்ந்த அக்கறைகளைக் கருத்துகளைப் பிரச்சாரமாக இல்லாமல் அபாரமான திரைமொழியுடனும் உணர்வுபூர்வமிக்க உயிரோட்டமான காட்சிகளாக மாற்றும் திறனில் வல்லமை பெற்றவர்.

உலகமயமாக்கலின் விளைவான நவீன வாழ்க்கையில் பல்வேறு தரப்பினருக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்ட நிராதரவான பிரிவினருக்கு ஏற்படும் பிரச்சினைகளே ராம் இதுவரை இயக்கிய நான்கு படங்களுக்கும் அடிச்சரடாக உள்ளது. அதே நேரம் பாலியல் என்னும் இயற்கைத் தேவையைப் பற்றி துணிச்சலாகவும் முதிர்ச்சியுடனும் கையாள்வது, தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த தவறான அபிப்ராயங்களைக் கட்டுடைப்பது, நாயகிக்கு இணையாக ஒரு திருநங்கை கதாபாத்திரத்தை உருவாக்கியதோடு அதில் நிஜ திருநங்கையையே நடிக்க வைத்தது என ராமின் துணிச்சலான முன்னெடுப்புகள் சமூக மாற்றத்துக்கான விதைகளைத் தூவுபவையாக அமைந்திருக்கின்றன.

அவருடைய படங்களை அவற்றில் வெளிப்படும் கருத்துகளுக்காகவோ திரைமொழி சார்ந்தோ கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களாலும் நிராகரித்துவிட முடியாத படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் ராம்.

இயக்கத்தைத் தவிர மிஷ்கின் எழுத்தில் உருவான 'சவரக்கத்தி' படத்தில் கதையின் நாயகனாகவும் மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து நடிகராகவும் கவனம் ஈர்த்திருக்கிறார் ராம்.

இயக்குநர் ராம் இன்னும் பல முக்கியமான தரமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும். மென்மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE