’’ ராதிகா ’தமுக்குத்தக்கா தமுக்குத்தக்கா’ என்று நடந்து வந்தார்; யாருக்குமே பிடிக்கலை ராதிகாவை! ’கிழக்கே போகும் ரயில்’ படத்தில் மாதவிதான் நடிச்சிருக்கணும்!’’ - இயக்குநர் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ அனுபவங்கள்

By வி. ராம்ஜி

’’ ராதிகா ’தமுக்குத்தக்கா தமுக்குத்தக்கா’ என்று நடந்து வந்தார்; யாருக்குமே பிடிக்கலை ராதிகாவை! ’கிழக்கே போகும் ரயில்’ படத்தில் மாதவிதான் நடிச்சிருக்கணும்!’’ என்று இயக்குநர் பாரதிராஜா தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் பாரதிராஜா, ’என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணைய சேனலில் தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரை அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.
அதில் ‘கிழக்கே போகும் ரயில்’ பட அனுபவத்தையும் ராதிகாவை தேர்வு செய்தது குறித்தும் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

’’ ’16 வயதினிலே’ படம் வந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஓவர் நைட்டில் பாரதிராஜா பாப்புலராகிவிட்டான். அடுத்து, படம் பண்ண வேண்டும். என் முதலாளி எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு படம் பண்ணவேண்டும் . என்னுடைய அருமையான நண்பன் ஆர்.செல்வராஜின் கதை. ‘கிழக்கே போகும் ரயில்’. ஒரிஜினல் வெர்ஷன் வேறு. நீங்கள் படத்தில் பார்த்த வெர்ஷன் வேறு.

ஒரிஜினல் கதையை இப்போது சொல்கிறேன். கிராமத்து ரயில்வே ஸ்டேஷன். அங்கே கையில் ஒரு பையை வைத்துக்கொண்டு, ‘கிழக்கே போற ரயில்’ எப்ப வரும்’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள் பாஞ்சாலி. சென்னையில் இருந்து கிராமத்துக்கு கச்சேரி பண்ண வந்த குரூப், அங்கே கள் குடித்துவிட்டு போதையில் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்கிறாள். அவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு, கூட்ஸ் கேரேஜுக்குள் வைத்து சூறையாடிவிடுகிறார்கள்.

அவள் ஒரு அப்பாவி. இன்னசெண்ட். சென்னைக்கு வருகிறாள். அவளை யாரெல்லாம் அவர்கள் குடும்பத்துக்கு நல்லது செய்கிறாள். பரஞ்சோதியைத் தேடுகிறாள். பரஞ்சோதி பிரஸ்ஸில் வேலை பார்க்கிறான். அவன் ஒரு புக் எழுதுகிறான். அந்த புத்தகத்தலைப்பு ‘எங்கிருந்தாலும் ஒரு குரல் கொடு’.

அந்தப் புத்தகம் பிரிண்ட் செய்யப்பட்டு, ஒரு வேனில் புத்தகங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு வண்டியில் வருகிறான். அப்போது ஒரு பாலத்தின் கீழ், சிலர் பாஞ்சாலியை சூறையாட முயலுகிறார்கள். அவள் அங்கிருந்து தப்பி, ரோட்டுக்கு வருகிறாள். இருட்டில் தெரியவில்லை. பரஞ்சோதி வந்த வேன் அவள் மீது மோதுகிறது. ‘பரஞ்சோதி...’ என்று கத்திக்கொண்டே விழுகிறாள். அவள் மீதும் அவளைச் சுற்றியும் புத்தகங்கள் சிதறிக்கிடக்கின்றன. ‘எங்கிருந்தாலும் ஒரு குரல் கொடு’ என்ற புத்தகம். அவன் அப்படியே கதறுகிறான். இதுதான் ஒரிஜினல் கதை.

முதலில் மாதவிதான் நடிப்பதாக இருந்தது. அப்போதுதான் அறிமுகமாகியிருக்கிறார். தெலுங்குப் படம் வந்ததால், ஹைதராபாத்துக்குப் போய்விட்டார். அதனால் அவர் நடிக்கமுடியாமல் போய்விட்டது. அடுத்து, வேறு ஒரு பெரிய நடிகரின் சகோதரியை செலக்ட் செய்து, கையெழுத்தெல்லாம் போட்டாகிவிட்டது.

மேட்டுப்பாளையத்தில்தான் ஷூட்டிங். ஆரம்பிக்க வேண்டும். எல்லோரும் போய்விட்டோம். ஆனால் அந்தப் பொண்ணு வரவில்லை. என்ன காரணமென்றால், அன்றைக்கு இருந்த மிகப்பெரிய புலி, ஒரு காண்ட்ராக்ட் போட்டு, அப்படியே கவிழ்த்துவிட்டார்.

யூனிட் மொத்தமும் மேட்டுப்பாளையத்தில் காத்துக்கொண்டிருக்கிறது. முதன் முதல்ல பாட்டு எடுக்கவேண்டும். ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாட்டு எடுக்கவேண்டும். ’நிவாஸ், என்ன பண்ணலாம்? கேரளா போய் ஒரு ஹீரோயின் பிடிச்சுட்டு வரலமா?’ என்று கேட்டேன். எழுபது பேர் தயாராக இருக்கிறார்கள். நான் ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கிறேன்.

மெட்ராஸ் போகலாம் என்று முடிவானது. சென்னைக்கு வந்தோம். இதற்கென மீடியேட்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆல்பமெல்லாம் கொண்டு வந்து தருகிறார்கள். அப்போது விஜயகுமார் என்று ஒரு டான்ஸர். அந்த அம்மா பெயர் ஞாபகமில்லை. அவருடைய சிஸ்டருக்கு சான்ஸ் கேட்டு ஆல்பம் கொண்டு வந்தார்கள். அந்த ஆல்பத்தைப் புரட்டிக்கொண்டே வந்தேன். அதில் ஒரு புகைப்படம். ‘இந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?’ என்று கேட்டேன். ’அது சிலோன்காரப் பொண்ணு. லண்டனுக்கு ஏதோ படிக்கிறதுக்குப் போவுது. பக்கத்து வீட்ல இருக்குது’ என்றார். எங்கே என்று கேட்டேன். பெசண்ட் நகர் என்றார்.

அந்த சமயத்தில்தான் பெசண்ட் நகரில் ஒரு கொலை நடந்திருந்தது. சென்னையே பரபரப்பான பேச்சாக இருந்தது. அந்த வீட்டில்தான் அவர்கள் இருக்கிறார்கள். ‘என்னடா இது. அப்படியொரு வீட்டில் இருக்கிறார்களா?’ என்று யோசித்தேன். ’நம்ம சகோதரிக்கு வாய்ப்பு கேட்டா, இவரு ஏதோ போட்டோவைப் பாத்துட்டு கேக்கறாரே’ என்று அந்தப் பெண்மணிக்கு வருத்தம்தான். அந்தப் போட்டோவில், ஒரு புன்னகை. அந்த முடியும் நன்றாக இருந்தது.

விலாசமெல்லாம் வாங்கிக்கொண்டு, நானும் புரொடக்‌ஷன் மேனேஜரும் போனோம். அப்போதெல்லாம் கர்லிங் முடியும் வேஷ்டியுமாக இருப்பேன். வீட்டுக்குப் போனோம். அந்தப் பொண்ணு தோட்டத்துக்கு தண்ணி ஊத்திட்டிருந்தது. கன்னங்கரேல் என்று இருந்தாள். ’எக்ஸ்க்யூஸ் மீ’ என்றேன். ஏதோ ரவுடியைப் பார்த்தது போல், வீட்டுக்குள் ஓடிவிட்டது.

உள்ளே போனோம். ராதிகாவின் அம்மா வந்தார். அந்த அம்மா சிலோன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். தெரியும் என்றார். ‘உங்க பொண்ணை நடிக்க வைக்கலாம்னு. போட்டோ பாத்தேன். கொஞ்சம் கூப்பிடுங்க’ என்றேன். உள்ளே அம்மாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை. ஒருவழியாக வந்தார்.

நான் உற்றுப் பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு பயங்கர கோபம். ‘தாவணி இருக்காம்மா. கொஞ்சம் போட்டுகிட்டு வாம்மா’ என்றேன். இன்னும் கோபமானார். பிறகு ஒரு துண்டை தாவணி போலாக்கி அந்தப் பெண்ணின் மீது வைத்துப் பார்த்தேன். இன்னும் டென்ஷனாகி கத்த ஆரம்பித்துவிட்டார். பிறகு அம்மாவிடம் ஆங்கிலத்தில் கத்தினார். அம்மா விஷயம் சொன்னதும் கொஞ்சம் அமைதியானார்.

அடுத்து... புலியூர் சரோஜா என்றொரு டான்ஸ் மாஸ்டர். அவரை அழைத்து வரச் சொல்லி, ராதிகாவுக்கு ரிதம்சென்ஸ் இருக்கிறதா என்று பார்த்தேன். உடனே சொல்லிக்கொடுத்ததை பண்ணினார். ஓ.கே. சொல்லிவிட்டேன்.

மறுநாள்... மகாபலிபுரம் ரோட்டில் ஒரு டெஸ்ட் ஷூட். விஜிபி தாண்டி, ஒரு சின்னக் கோயில். அதற்குப் பக்கத்தில் ஒரு மரம். அங்கே வைத்து ஷாட் எடுத்துப் பார்ப்போம் என்று போனோம். அதுவரைக்கும் அவர், எம்.ஆர்.ராதாவின் மகள் என்று தெரியாது எனக்கு. ’தமுக்குத்தக்கா தமுக்குத்தக்கா’ என்று ராதிகா நடந்து வந்தார். ‘என்னய்யா’ என்று நிவாஸ் என்னைப் பார்த்தான். அம்பாசிடர் காரில் இருந்து இறங்கியதும்தான், எம்.ஆர்.ராதாவின் மகள் என்பது தெரியும். ‘வம்புல மாட்டப் போறோமோ’ என்று பயந்துட்டேன்.

‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாடலில், ‘வீரபாண்டிக் கோயிலிலே வருகிற தைப் பொங்கலிலே’ என்ற வரிகளுக்கு நடிக்கச்சொன்னேன். ‘பூசணிக்காய் மாதிரி இருக்குப்பா’ என்று நிவாஸ் சொன்னான். ’எங்க ஊர்ல பொண்ணுங்க இப்படித்தான் இருப்பாங்க நிவாஸ்’ என்று சொன்னேன். ஓகேயானது.

மறுநாள். சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் போனோம். அம்மாவும் பெண்ணும் சிங்களத்தில் பேசிக்கொண்டே வந்தார்கள். என்னடா இது ரொம்பப் பேசுது என்று கடவுள் மேல் பாரத்தைப் போட்டேன். ஸ்டேஷனில் இறங்கினால், பாக்யராஜும் விஜயனும் நின்றார்கள். என்னிடம் ‘ஹீரோயின் என்னாச்சு சார்’ என்று கேட்டார்கள். ‘இதான்’ என்று ராதிகாவைக் கைகாட்டினேன். ‘சார்... படத்துக்கு ஹீரோயின் எங்கே சார்னு கேட்டோம்’ என்றார்கள். ‘இதான்யா’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தேன்.

ஷூட்டிங். மெல்ல ஆடிக்கொண்டே நடந்து வரவேண்டும். கையில் ஒரு பூ. ‘தமுக்குத்தக்கா தமுக்குத்தக்கா’ என்று நடந்து வந்தார். அம்மா இங்கேயிருந்து சொல்ல, ராதிகா அங்கேயிருந்து ஏதோ சொல்ல, பிறகு ராதிகா ஓடிவந்து, அழுதுகொண்டே ‘சார், என்னை விட்ருங்க. நான் நடிக்கல. எனக்கு நடிப்பு வரலை’ என்று அழுதார். அவரை சமாதானப்படுத்தி, மையெல்லாம் அழிந்திருந்தது. அதையெல்லாம் துடைத்துவிட்டு, ‘சிவாஜி சாருக்கே இப்படியெல்லாம் நடந்திருக்கும்மா. உனக்கு நடிப்பு வருது. நல்லா நடிக்கிறே’ என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி சாக்லெட் கொடுத்து, நடிக்க வைத்தேன்.

முதல் நாள். ரெண்டாம் நாள். மூன்றாம் நாள். நான்காம் நாள். யாருக்கும் ராதிகாவின் நடிப்பு திருப்தி தரவில்லை. ஐந்தாம் நாள். ஆறாம்நாள். ராதிகாவின் நடிப்பைக் கண்டு எல்லோரும் திருப்தியானார்கள். ‘இந்தப் பொண்ணுதான் இந்தக் கேரக்டருக்கு சரியான பொண்ணு’ என்றார்கள்.’’

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்