தன்பாலின முத்தக் காட்சியை சென்சார் செய்த இந்திய சேனல்: இயக்குநர் சாடல்

By செய்திப்பிரிவு

தனது ஷிட்ஸ் க்ரீக் தொடரில் தன்பாலின முத்தக் காட்சியைத் தணிக்கை செய்த இந்திய சேனலை அதன் இயக்குநர் டேன் லெவி சாடியுள்ளார்.

கனடிய நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர் ஷிட்ஸ் க்ரீக். 6 சீஸன்கள் இதுவரை ஒளிபரப்பாகியுள்ளன. டேன் லெவியும், அவரது தந்தை யூஜின் லெவியும் இணைந்து இந்தத் தொடரை உருவாக்கினார்கள்.

மிகப்பெரிய பணக்காரர்கள் தங்களின் பணத்தை இழந்தால் எப்படி வாழ்க்கையை நடத்துவார்கள் என்பதைப் பற்றிய நகைச்சுவைத் தொடரான இது எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளது. நடந்து முடிந்த எம்மி விருது வழங்கு விழாவில் அதிக விருதுகளை வென்று நகைச்சுவைத் தொடர் என்கிற சாதனையைப் படைத்தது.

இந்தத் தொடர் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கக் கிடைத்தாலும் இந்தியாவில் காமெடி சென்ட்ரல் என்கிற சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் காமெடி சென்ட்ரல் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து, ஷிட்ஸ் க்ரீக் தொடரின் ஒரு காட்சி பகிரப்பட்டது.

இதில் இரண்டு ஆண் கதாபாத்திரங்கள் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி நீக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த தொடரின் இயக்குநர் டேன் லெவி, "இரண்டு பெண்கள் முத்தமிட்டதைக் காட்டினீர்கள், ஆணும் பெண்ணும் முத்தமிட்டதைக் காட்டினீர்கள், இரண்டு ஆண்கள் முத்தமிட்டுக்கொள்வதை ஏன் நீக்கினீர்கள்? அனைத்துத் தரப்பையும் உள்ளடக்குவதன் திறனைப் பற்றியதுதான் இந்த நிகழ்ச்சி. தன்பாலின நெருக்கத்தைத் தணிக்கை செய்வதன் மூலம் நிகழ்ச்சியின் நோக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்திவிட்டீர்கள்" என்று சாடிப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பல பயனர்கள் காமெடி சென்ட்ரலின் அமெரிக்கப் பிரிவைக் குறிப்பிட்டு கருத்துப் பதிவிட, ''இது காமெடி சென்ட்ரல் இந்தியப் பிரிவைப் பற்றியது. அமெரிக்காவில் இந்தத் தொடர் தணிக்கை செய்யப்படவில்லை. அவர்கள் அன்போடும் மரியாதையோடும் நடத்துகின்றனர்'' என்று டேன் லெவி பதிவிட்டிருந்தார்.

இந்தத் தொடரில் அனைத்துப் பாலினங்கள் மீதும் ஈர்ப்புள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ள டேன் லெவி தான் ஒரு ஆண் கதாபாத்திரத்தைக் காதலிப்பது போல கதையமைத்துள்ளார். மேலும் எல்ஜிபிடி பிரிவினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து ஆதரவுக் குரல் கொடுத்து வருபவர் டேன் லெவி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE