கேதர் ஜாதவ் விஷயத்தில் எல்லை மீறி இருக்கிறோம்: சாந்தனு 

By செய்திப்பிரிவு

கேதர் ஜாதவ் விஷயத்தில் எல்லை மீறி இருக்கிறோம் என்று சாந்தனு தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் நேற்று (அக்டோபர் 7) சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தத் தோல்வியால் சமூக வலைதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது. முக்கியமாக, கேதர் ஜாதவின் பேட்டிங்கிற்கு இப்போது வரை விமர்சனங்களும், கிண்டல்களும் எதிரொலித்து வருகின்றன. இதனால் #kedarjadhav என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நீக்கச் சொல்லி பலரும் இணையத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நாம் அனைவரும் உயிர் ரசிகர்கள். நாம் உணர்ச்சிவசப்படுவோம். ஆனால் கேதர் ஜாதவ் விஷயத்தில் எல்லை மீறி எதிர்மறையாக இருக்கிறோம் என நினைக்கிறேன். ஒரு விளையாட்டு வீரனாக, எல்லோருக்கும் களத்தில் மோசமான நாள் அமையும் என்பது எனக்குத் தெரியும். களத்தில் பல விஷயங்கள் மனதில் ஓடும். அப்படி ஆடுவது எளிதல்ல.

ஆனால், கண்டிப்பாக ஜாதவ்வும் சிஎஸ்கேவும் மீண்டு வருவார்கள் என உறுதியாகச் சொல்வேன். இதற்காக மனு போடுவது எல்லாம் மிகவும் கடுமையானது. ஒருவர் மீது அதிக வெறுப்பைக் காட்ட வேண்டாம். ஆம், ஒரு வேளை அவருக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் ஓய்வு தந்தால் அவர் மீண்டும் உற்சாகத்தோடு வலிமையுடன் ஆட வழி கிடைக்கும். எதையும் தீவிரமாக்காமல் எளிதாக எடுத்துக்கொள்வோம். எப்படியிருந்தாலும் அது ஒரு விளையாட்டுதான்".

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE