எய்ம்ஸ் குழுவினரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - சுஷாந்த் குடும்ப வழக்கறிஞர் கோரிக்கை

எய்ம்ஸ் தடயவியல் குழுவினரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சுஷாந்த் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போது, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்குத் தெரியாமலேயே போதைப் பொருள் கொடுத்து, அவரது மனநிலையைப் பாதிக்கச் செய்ய முயன்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சுஷாந்த் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை, சிபிஐயிடம் ஒப்படைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஒரு மாத காலத்துக்குப் பிறகு ரியா நேற்று மாலை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் டாக்டர் சுதீர் குப்தா தலைமையிலான எய்ம்ஸ் தடயவியல் குழுவினரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சுஷாந்த் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

" எய்ம்ஸ் தடயவியல் குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தனர் என்பதையும், ஊடகங்களுக்கு அவர்கள் கொடுத்த தகவல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இது தற்கொலையா கொலையா என்ற கேள்விக்கான பதிலை மருத்துவர்கள் சொல்லக் கூடாது. அதை சிபிஐ அதிகாரிகள் தான் சொல்லவேண்டும். அவர்கள் சிபிஐ-யிடம் ஒப்படைத்த அறிக்கையில் சுஷாந்த் உடலில் இருந்த காயங்கள், முறிவுகள் குறித்த தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

எய்ம்ஸ் குழுவினரின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது. சுஷாந்த் மரணம் குறித்த அறிக்கை பொதுவெளியில் பகிரப்படாத போது அவர்கள் தொலைகாட்சி சேனல்கள் தோன்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்."

இவ்வாறு விகாஸ் சிங் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE