பேட்டியால் உருவான சர்ச்சை: ஸ்ருதி ஹாசன் விளக்கம்

By செய்திப்பிரிவு

தனது பேட்டியால் தெலுங்குத் திரையுலகில் உருவான சர்ச்சைக்கு ஸ்ருதி ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கில் பவன் கல்யாணுடன் 'வக்கீல் சாப்' மற்றும் ரவி தேஜாடவுன் 'க்ராக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தெலுங்குத் திரையுலகைப் பற்றி மதிப்பு குறைவாகப் பேசியதாக ஆந்திர ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இது சர்ச்சையை உருவாக்கியது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தேசிய ஊடகம் ஒன்றுக்கு நான் தந்த பேட்டியை சில தெலுங்கு ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு அதை வைத்துப் பொய்யான செய்திகளை எழுதி வருகின்றன. 'ரேஸ் குர்ரம்', 'கப்பார் சிங்' போன்ற படங்களில் பங்கெடுத்ததை நான் பெருமையாக நினைக்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். பவன் கல்யாணுடன் நான் நடித்த 'கப்பார் சிங்' என் வாழ்க்கையை மாற்றியது.

தெலுங்கு, தென்னிந்தியத் திரையுலகத்தில் ஒரு பங்காக இருப்பது, என் இதயத்தின் ஒரு பங்கு. நான் நடித்த இந்திப் படங்களை வைத்தே அந்தப் பேட்டியில் பேசியிருந்தேன். மேலும் வட இந்திய - தென்னிந்தியப் படங்களுக்கு இடையேயான எனக்கு என்றும் பிடித்திராத ஒப்பீடு பற்றிய புரிதல் குறித்தும் பேசியிருந்தேன். இது அனைவருக்கும் விஷயங்களைத் தெளிவுபடுத்தும் என நினைக்கிறேன்".

இவ்வாறு ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE