ரியாவுக்கு ஜாமீன்: சகோதரர் ஷெளவிக் ஜாமீன் மனு நிராகரிப்பு

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்ரபர்த்திக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. அதே நேரம் ரியாவின் சகோதரர் ஷௌவிக்கின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்தின் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ரியா உள்ளிட்ட ஐவரும் அடக்கம்.

ஆகஸ்ட் 19 அன்று சுஷாந்த் வழக்கு தொடர்பான அத்தனை விசாரணைகளையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே போதை மருந்து தடுப்புப் பிரிவுக்கு இந்த வழக்கில் விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என்று ரியா, ஷௌவிக் ஆகியோரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

மேலும், எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டார்களோ அது பிணையில் விடக்கூடியதே என்றும், போதைப் பொருள் ஒழிப்புச் சட்டம் 217ஏ பிரிவின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை நடந்தது. நீதிபதி எஸ்.வி.கோட்வால் இதை விசாரித்தார். இன்று காலை ரியா, திபேஷ் சாவந்த், சாமுயல் மிராண்டா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ரியா ஒரு லட்ச ரூபாய் ஜாமீன் தொகையும், மற்ற இருவரும் தலா ரூ.50 ஆயிரமும் கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷௌவிக் மற்றும் அப்துல் பச்சீத் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்கெனவே இவர்கள் ஐவரும் கடந்த மாதம் ஜாமீன் கோரி அது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரியாவுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து பேசிய அவரது வழக்கறிஞர் மனீஷ் ஷிண்டே, "உண்மையும் நீதியும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் இந்தக் கைது தேவையற்றது என்றும், சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரியா அடுத்த 10 நாட்களுக்கு அவர் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். போதை மருந்து தடுப்புப் பிரிவிடம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதோடு அவர்களிடம் சொல்லாமல் மும்பையை விட்டுச் செல்லக் கூடாது ஆகிய நிபந்தனைகளையும் மும்பை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE