சுஜாதாவின் நாவல்; வில்லன் ரஜினி; பரிதாப ஸ்ரீதேவி; காப்பாற்றும் ஜெய்சங்கர்; பஞ்சு அருணாசலத்தின் ‘காயத்ரி’ - உயிரை உருக்கும் ‘வாழ்வே மாயமா’ பாடல்

By வி. ராம்ஜி

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெற்றி பெற்ற எத்தனையோ படங்களுக்குப் பின்னே கதாசிரியராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக இருந்திருக்கிறார் பஞ்சு அருணாசலம். படத்தின் டைட்டிலில் பெயர் இடம்பெற்ற படங்களும் இடம் பெறாவிட்டாலும் கதையைச் செம்மைப்படுத்துவதிலும் என தன் பங்கைச் செலுத்திய பஞ்சு அருணாசலம், தன்னுடைய கதையை மட்டுமின்றி, பிறரின் கதையையும் கேட்டு வாங்கிப் படமெடுத்து வெற்றி கண்டிருக்கிறார். அப்படியொரு படம்தான் ‘காயத்ரி’.

எத்தனையோ படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், தன் முதல் படமான ‘முள்ளும் மலரும்’ தொடங்கி பல படங்களை, எழுத்தாளர்களின் கதைகளை வாங்கிப் படமெடுப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தார். பஞ்சு அருணாசலமும் மிகச்சிறந்த கதாசிரியர் என்ற போதும், எழுபதுகளில் எத்தனையோ ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள், கமல், ரஜினியின் படங்கள், முத்துராமன் படங்கள் என்றெல்லாம் பண்ணினாலும் எழுத்தாளர்களின் படைப்புகளையும் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

மகரிஷியின் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ அப்படித்தான் பஞ்சு அருணசலம் பண்ணினார். எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை வாங்கி அப்படித்தான் ‘காயத்ரி’ படத்தையும் ‘ப்ரியா’ படத்தையும் பண்ணினார் பஞ்சு அருணாசலம்.

ரஜினி வளர்ந்துகொண்டிருக்கும் போதே, ரஜினி உச்சம் தொடுவார் என்பதை உணர்ந்த படைப்பாளி பஞ்சு அருணாசலம், தொடர்ந்து தன் படங்களில் அவருக்கு வாய்ப்புகளைக் கொடுத்துக்கொண்டே வந்தார். சிவகுமார், ஸ்ரீதேவி நடித்த ‘கவிக்குயில்’ படத்தில் ஸ்ரீதேவியின் அண்ணனாக ரஜினி நடித்திருப்பார். ‘புவனா ஒரு கேள்விக்குறி’யில் அட்டகாசமான கேரக்டர் ரோல் கொடுத்திருப்பார். இந்தப் படத்தில் சிவகுமார், சுமித்ரா முதலானோர் நடித்தார்கள்.

எழுபதுகளில், எழுபதுகளின் மத்தியில்தான் ரஜினி அறிமுகமானார். ‘அன்னக்கிளி’யில் இளையராஜா அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிக்கும் படங்கள் வந்தன. இளையராஜாவுக்கும் வரிசையாக படங்கள் வந்தன. இந்த சமயத்தில் பஞ்சு அருணாசலம், எழுத்தாளர் சுஜாதாவிடம் கதையை வாங்கி, திரைக்கதை வசனம் எழுதினார். 'காயத்ரி’ திரைப்படத்தை உருவாக்கினார். ஜெய்சங்கர், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி என்று டைட்டில் போடப்படும். இந்தப் படத்தில் ரஜினியை வில்லன் என்று மட்டுமே சொல்லிவிடமுடியாது. வில்லனிக் ஹீரோ, நெகட்டீவ் ஹீரோ என்றுதான் சொல்லவேண்டும்.

பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்துகொண்டு, நீலப்படம் எடுத்து விற்பனை செய்யும் மோசமான கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். அப்படித்தான் திருச்சியில் உள்ள குடும்பத்தை ஏமாற்றி, ஸ்ரீதேவியைத் திருமணம் செய்துகொள்வார். ரஜினியைச் சுற்றியுள்ளவர்கள் அக்கா, அக்கா மகள் என்றெல்லாம் சொன்னாலும் அவர்கள் அனைவருமே ரஜினியின் இந்த வேலைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள். ரஜினியின் முதல் மனைவி, வீட்டுக்குப் பின்னே சிறிதான வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருப்பார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பார்.

ரஜினியின் விஷயங்களை ஓரளவு தெரிந்துகொண்டு, அங்கிருந்து தப்பிக்க வழி தெரியாமல் கலங்குவார். தன் கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லி, பழைய பேப்பர் போடும்போது அதில் எழுதியிருக்கும் நோட்டையும் சேர்த்து போட்டுவிடுவார்.

அந்த நோட்டு, தனியார் துப்பறியும் நிறுவனம் வைத்திருக்கும் ஜெய்சங்கரின் உதவியாளரான வெண்ணிற ஆடை மூர்த்தியின் கையில் கிடைக்கும். அவர் ஜெய்சங்கரிடம் கொடுப்பார். அதைப் படித்துவிட்டு, அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமே என்று விஷயங்களைச் சேகரிப்பார்.

இறுதியில், ஸ்ரீதேவியை அவர் எப்படிக் காப்பாற்றினார், ரஜினி எப்படி சிக்கிக் கொண்டார் என்பதுடன் படம் நிறைவுறும்.

படத்தின் ஆரம்பம் முதலே ரஜினி வந்துவிடுவார். ரஜினி, ஸ்ரீதேவி, ராஜசுலோசனா, எம்.என்.ராஜம், அசோகன் என்று இடைவேளை முழுக்கக் காட்சிகள் இருக்கும். இடைவேளைக்குப் பின்னர்தான் ஜெய்சங்கர் எண்ட்ரி ஆவார்.

கணவனே மனைவியை வைத்து, நீலப்படம் எடுக்கும் சப்ஜெக்ட் என்பது அந்தக் காலகட்டத்தில் சினிமாவுக்கு புதுசுதான். ஆனால் அதை ஆபாசமில்லாமலும் அருவெறுக்கத்தக்க வகையில் காட்சிப் படுத்தாமலும் எடுத்திருப்பதுதான் சிறப்பு. படத்தின் பின்னணி இசையில் இளையராஜா அப்போதே மிரட்டியிருப்பார்.
‘காலைப்பனியில்’ என்றொரு மெலடிப் பாடல். சுஜாதா பாடியிருப்பார். மனதை மயிலிறகால் வருடுவது மாதிரியான பாடல். ’ஆட்டம் கொண்டாட்டம்’ என்றொரு பாடலும் ’உன்னைத்தான் அழைக்கிறேன்’ என்றொரு பாடலும் சிறப்பாகவே அமைந்திருந்தன. சசிரேகா, சுஜாதா, ஏ.எல்.ராகவன் முதலானோர் இந்தப் படத்தில் பாடியுள்ளனர்.
சசிரேகா பாடிய ‘வாழ்வே மாயமா... பெருங்கதையா... கடும் புயலா.. வெறுங்கனவா நிஜமா’ என்ற பாடல் கேட்பவர்களையெல்லாம் தொட்டு அசைத்தது. உயிர் வரை சென்று உருக்கியெடுத்தது. ரஜினியின் வேகம், படபட வசனம், அவர் பார்வை என்று ரஜினியின் மேனரிஸங்கள் எல்லாமே எல்லோருக்கும் பிடித்தன.

1977ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி வெளியானது ‘காயத்ரி’ திரைப்படம். கொஞ்சம் பிசகினாலும் ஆபாசமாகிவிடுகிற சப்ஜெக்ட்டை வைத்துக்கொண்டு, ‘அலர்ட்’ செய்கிற படமாகக் கொடுத்திருப்பார். ஆர்.பட்டாபிராமன் இயக்கியிருந்த இந்தப் படம், 43 ஆண்டுகளானாலும் இன்றைக்கும் மறக்க முடியாத கதை; மறக்கமுடியாத படம்; மறக்கவே மறக்கமுடியாத ‘வாழ்வே மாயமா’ பாடல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE