தமிழக காவல்துறைக்கு 'க/பெ ரணசிங்கம்' தயாரிப்பாளர் நன்றி

By செய்திப்பிரிவு

தமிழக காவல்துறைக்கு 'க/பெ ரணசிங்கம்' படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் ஓடிடி தளமான ஜீ ப்ளக்ஸில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில், இந்தப் படம் வெளியான ஒரு மணி நேரத்திலேயே ஒட்டுமொத்தப் படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தார்கள்.

மேலும், பல்வேறு ஊர்களில் உள்ள கேபிள் டிவிகளிலும் 'க/பெ ரணசிங்கம்' படத்தை ஒளிபரப்பினார்கள். இதனைக் கட்டுப்படுத்த 'க/பெ ரணசிங்கம்' குழுவினர் களமிறங்கினார்கள். விஜய் சேதுபதி ரசிகர்கள் கொடுத்த தகவலை வைத்து, சில ஊர்களில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

’க/பெ ரணசிங்கம்’ குழுவினருக்குத் தமிழக காவல்துறையும் உதவியிருக்கிறது. இதற்காக நன்றி தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இது தொடர்பாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உள்ளூர் கேபிள்களில் 'க/பெ ரணசிங்கம்' படத்தைத் திரையிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக காவல்துறைக்கும், காவல்துறையின் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கும் நன்றி. காவல்துறையின் ஆதரவுடன் எதிர்காலத்திலும் இப்படியான குற்றச்செயல்கள் நடந்தால் அதைத் தடுப்போம்".

இவ்வாறு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE