‘கரோனா வைரஸைக் கண்டு அஞ்ச வேண்டாம்’ - ட்ரம்ப் ட்வீட்; கேப்டன் அமெரிக்கா நடிகர் கடும் சாடல்

கரோனா வைரஸைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை நடிகர் க்றிஸ் எவான்ஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், ட்ரம்ப்புக்குக் காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே வால்டர் ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 3 இரவுகள் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையடுத்து ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார். எனினும் ட்ரம்ப் கரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டாரா என்று இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை .

மேலும் கரோனா வைரஸைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறிக்கொண்டே இருந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல நடிகர் க்றிஸ் எவான்ஸ் அதிபர் ட்ரம்ப்பின் பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.

இதுகுறித்து க்றிஸ் எவான்ஸ் கூறியுள்ளதாவது:

“கரோனா வைரஸுக்கு பயப்பட வேண்டாமா? நீங்கள் சிறப்பான மருந்துகளை உட்கொண்டு 24 மணி நேரமும் சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தீர்கள். இந்த வசதி எல்லாருக்கும் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்த வித்தியாசம் உங்களுக்கு நன்றாகவே தெரியும், ஆனாலும் உங்களுக்குக் கவலை இல்லை''.

இவ்வாறு க்றிஸ் எவான்ஸ் கூறியுள்ளார்.

க்றிஸ் எவான்ஸ் மார்வெல் நிறுவனத்தின் ‘கேப்டன் அமெரிக்கா’ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE