யூனிவர்ஸல் பிக்சர்ஸின் இந்தியப் பிரிவை மூட முடிவு

By செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யூனிவர்ஸல் பிக்சர்ஸின் இந்தியப் பிரிவை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

'ஜுராஸிக் பார்க்', 'ஈ.டி', 'மினியான்ஸ்', 'ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்திருக்கும் நிறுவனம் யூனிவர்ஸல் பிக்சர்ஸ். இதன் இந்தியப் பிரிவு மற்றும் அதன் செயல்பாடுகளை இந்த வருடக் கடைசியில் மொத்தமாக நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக மட்டுமே இந்த முடிவை யூனிவர்ஸல் எடுக்கவில்லை என்றும், கரோனாவால் ஏற்பட்ட நஷ்டமும் இதற்கு ஒரு காரணம் என்றும் தெரிகிறது.

ஆனால், யூனிவர்ஸல் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும். அதை இந்தியாவில் வெளியிடும். அதை விநியோகிக்கும் வேலையை இனி வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் கவனிக்கும். இதற்குப் பதிலாக, வார்னர் பிரதர்ஸின் திரைப்படங்களை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வெளியிடும் வேலையை இனி யூனிவர்ஸல் பார்த்துக் கொள்ளும். இதுகுறித்து அதிகாரபூர்வ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே 'கிங்காங்', 'பசிஃபிக் ரிம்' உள்ளிட்ட திரைப்படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து யூனிவர்ஸல் தயாரித்திருப்பதால் இரு நிறுவனங்களுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE