பெண்கள் மட்டுமே நடத்தும் வாடகைக் கார் சேவை: 10 வருடங்களாகத் தொடரும் ஆமிர்கானின் ஆதரவு

By செய்திப்பிரிவு

சகா கேப்ஸ் என்கிற வாடகைக் கார் சேவை நிறுவனத்துக்குக் கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் ஆமிர்கான் ஆதரவு கொடுத்து வருகிறார். தற்போது தனது 'லால் சிங் சட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கான போக்குவரத்து உதவிக்கும் சகா கேப்ஸ் சேவையையே அணுகியுள்ளார்.

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த பல எளிய மக்களை தனது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி மூலம் நடிகர் ஆமிர்கான் அறிமுகம் செய்தார். இதில் ஒரு பகுதியில், வீட்டு வன்முறை, துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்துடன், முழுக்க பெண்களை மட்டுமே வைத்து இயங்கும் சகா கேப்ஸ் என்கிற வாடகைக் கார் சேவை பற்றி ஆமிர்கான் அறிமுகம் செய்தார். அன்றிலிருந்தே இவர்களின் சேவைக்கு ஆமிர்கான் ஆதரவு அளித்து வருகிறார்.

தான் டெல்லிக்கு எப்போது வந்தாலும் சகா கேப்ஸ் சேவையை மட்டுமே எடுத்துக் கொள்வேன் என்றும் ஆமிர்கான் வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கேற்ப கடந்த 10 ஆண்டுகளாக ஆமிர்கான் எப்போது டெல்லி வந்தாலும் சகா கேப்ஸ் சேவையையே தேர்ந்தெடுத்துள்ளார்.

தற்போது ஆமிர்கானின் அடுத்த திரைப்படமான 'லால் சிங் சட்டா'வின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. 'ஃபாரஸ்ட் கம்ப்' என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கான இதில் கரீனா கபூர் நாயகியாக நடித்துள்ளார். டெல்லி படப்பிடிப்புக்கும், குழுவின் போக்குவரத்து உதவிக்கும் சகா கேப்ஸ் சேவையையே எடுத்துக் கொள்வோம் எனக் குழுவினர் அனைவரிடமும் ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய கரோனா அச்சுறுத்தல் சூழலில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வரும் பெண் ஓட்டுநர்களின் பாதுகாப்புக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் ஆமிர்கான் தனது குழுவினரிடம் அறிவுறுத்தியுள்ளார். 45 நாட்கள் இந்தப் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE