543 திரையரங்குகள் தற்காலிக மூடலா?- ட்விட்டரில் சினிவேர்ல்ட் பகிர்வு

By ஆலன் ஸ்மித்தீ

கரோனா நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட, அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய திரையரங்கச் சங்கிலியான ரீகல் சினிமாஸ் தங்களின் 543 திரையரங்குகளைத் தற்காலிகமாக மூட ஆலோசித்து வருகிறது.

ரீகல் சினிமாஸின் தாய் நிறுவனமான பிரிட்டனின் சினிவேர்ல்ட், அந்நாட்டில் இருக்கும் தங்களது திரையரங்குகளையும் தற்காலிகமாக மூட முடிவெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று சினிவேர்ல்ட் தரப்பு இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. வார இறுதியில் மட்டும் 50 ரீகல் சினிமா திரையரங்குகளைத் திறந்து வைக்கத் திட்டமிட்டு வருவதாக சினிவேர்ல்ட் கூறியுள்ளது.

"அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருக்கும் எங்கள் திரையரங்குகளைத் தற்காலிகமாக மூட நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம் என்பது சரியே. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்டபின் எங்கள் அத்தனை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதுகுறித்து எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்போம்" என்று சினிவேர்ல்ட் ட்வீட் செய்துள்ளது.

ஆனால், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கிட்டத்தட்ட 45,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சிஎன்என் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் 127 திரையரங்குகளை வைத்திருக்கும் சினிவேர்ல்ட், அமெரிக்காவில் 42 மாகாணங்களில், 543 அரங்குகளில், 7,155 திரைகளை ரீகல் சினிமாஸ் என்கிற பெயரில் வைத்திருக்கிறது . மார்ச் மாதம் கரோனா நெருக்கடியால் மூடப்பட்ட அரங்குகள், 'டெனட்' பட வெளியீட்டுக்குச் சற்று முன்பு திறக்கப்பட்டது. ஆனால், 'டெனட்' அமெரிக்காவில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கரோனா அச்சத்தால் மக்கள் திரையரங்குகளுக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையில் வரவில்லை.

தொடர்ந்து ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும் அளவு பெரிய பட்ஜெட் திரைப்படம் எதுவும் இல்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ஜேம்ஸ் பாண்ட் நோ டைம் டு டை', மார்வலின் 'ப்ளாக் விடோ', 'வொண்டர் வுமன் 2' உள்ளிட்ட திரைப்படங்களின் வெளியீடும் அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்தே சினிவேர்ல்ட் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2020 ஆம் வருடத்தின் முதல் அரையாண்டில், சினிவேர்ல்ட் குழுமத்தின் வருமானம் 67% சதவீதம் குறைந்து 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE