கிரிக்கெட்தான் என்னைச் சினிமாவுக்குள் கொண்டுவந்தது: விஷ்ணு விஷால் பகிர்வு

By செய்திப்பிரிவு

கிரிக்கெட்தான் என்னைச் சினிமாவுக்குள் கொண்டு வந்தது என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.

இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தனது படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதன் தெலுங்கு ரீமேக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

'' 'ராட்சசன்' படத்தில் வரும் அருண் கதாபாத்திரம் என் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த உதாரணம். முதலில் இயக்குநராக விரும்பி பின்னர் போலீஸ் வேலையில் சேர்ந்து இறுதியாக தனது சீரியல் கில்லர்கள் குறித்த தனது அறிவைப் பயன்படுத்தி சைக்கோ கொலையாளியைப் பிடிப்பார்.

என்னுடைய வாழ்க்கையில், ஒரு கிரிக்கெட் வீரராக ஆகவே நான் விரும்பினேன். கிரிக்கெட் தான் என்னைச் சினிமாவுக்குள் கொண்டுவந்தது என்பதை எப்போதும் உணர்கிறேன். ஒரு விளையாட்டு வீரனாக என்னால் எளிதாகக் கபடியைக் கற்றுக்கொள்ள முடிந்தது. நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் எனக்கு நற்பெயர் கிடைக்க உதவியது. அதன் பிறகுதான் ‘ஜீவா’ படம் உருவானது.

ஒரு விளையாட்டு வீரர் செய்வதைப் போலவே நான் என்னுடைய வெற்றி, தோல்விகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து மீளவும் கற்றுக்கொண்டேன். அதோடு என்னுடைய பிராண்ட் மேனேஜ்மெண்ட் எம்பிஏ டிகிரி கதைகளைத் தேர்ந்தெடுக்க எனக்கு உதவியது. ஒரு கிரிக்கெட் கேப்டனாக மக்கள் மேலாண்மை என்னை ஒரு தயாரிப்பாளராகவும் ஆக்கியது.

வாழ்க்கையில் எதுவும் வீணாவதில்லை, தொடர்ந்து ஆத்மார்த்தமாக கடினமாக உழையுங்கள். வாழ்க்கை உங்களுக்காக என்ன வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. ஞானம் என்பது எப்போதும் உங்கள் வலிமையாக இருந்து கடினமான சூழல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

நீங்கள்தான் உங்களுக்குச் சிறந்த போட்டியாளர். நம்புங்கள்''.

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE